Thursday, January 24, 2008
Friday, January 18, 2008
லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -2
என்னுடன் சேர்ந்து லங்காவி சுற்றுலால கலந்துக்கிட்ட நண்பர்களுக்கு நன்றி. எல்லாரும் டீ காப்பி குடிச்சிட்டு வந்திருப்பீங்கன்னு நம்புறேன். இப்போது தெம்பா ஊர் சுற்ற போகலாம். வர்றீங்களா?
ஃபெர்ரில வந்து இறங்கி வெளியாகும்போது நிறைய பேர் "சார், ஹோட்டல் வேணுமா, கார் வேணுமா. டாக்ஸி வேணுமா, எங்கே போகணும்?"ன்னு பல கேள்விகள் கேட்டு துளைச்சி எடுத்துடுவாங்க.. இவங்க தொழிலே வரும் சுற்றுப்பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கிறதுதான்.
சரி, நமக்கு இப்போ இது அவசியமில்லை. ஜெத்தி விட்டு வெளியே வந்ததும் உங்க இடது பக்கம் திரும்பி பார்த்தீங்கன்னா ஒரு பெரிய பருந்து ஒன்னு உங்களை பார்த்து நிற்கும். "வருக வருக.. லங்காவிக்கு வருக"ன்னு எல்லாம் அது சொல்லாது. ஏன்னா, அது ஒரு சிலை. ஆனாலும், நல்லா பெருசா கட்டியிருப்பாங்க. 12 மீட்டர் உயரம். நான் முன்னால் சொன்னதுபோல லங்காவி என்ற பெயருக்கு அடித்தளமே இந்த பருந்துங்கிறதுனால, ஜெத்தி அருகாமலையே இந்த பெரிய சிலை கட்டியிருப்பாங்க. வந்ததுமே நீங்க பார்க்கிற முதல் சுற்றுலா தளம். இந்த இடத்தின் பெயர் டத்தாரான் லாங் (Dataran Lang). கண்டிப்பா இந்த இடத்துல நீங்க போட்டோ எடுக்கணும்ன்னு நினைப்பீங்க.. நான் கொஞ்சம் வெயிட் பண்றேன். போட்டோ எடுக்கணும்ன்னு நினைக்கிறவங்க போய் போட்டோ எடுத்துட்டு வரலாம்.
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. இப்போ நீங்க இருகிற இடத்தின் பெயர் குவா (Kuah). இதுதான் லங்காவி தீவின் பட்டணம். ஃபெர்ரி மூலமாக வந்தால் நீங்கள் வந்திறங்குவது இங்கேதான். குவா என்றால் gravy. கிச்சாப் எனப்படும் வகையிலிருந்து தயாரிக்கப்படும் gravy. இந்த பெயருக்கு பின்னாலும் ஒரு புராண கதை இருக்குங்க.
முன்னொரு காலத்துல ரெண்டு ராட்சச மனிதர்கள் இங்கே வாழ்தாங்கலாம். ஒருத்தர் பெயர் மாட் சின்ச்சாங் (Mat Cincang). இன்னொருத்தர் பெயர் மாட் ராயா (Mat Raya). ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். யார் கண் பட்டுச்சோ தெரியல. ஒரு நாள் இவங்க பிள்ளைகள் கல்யாணத்தப்போ இவங்க ரெண்டு பேருக்கும் வாய் தகறாஉ ஆரம்பித்து கைக்கலப்பு ஏற்ப்பட்டது. அடித்துக்கொள்ளும்போது பக்கத்துல இருக்கிற பொருட்களை உபயோகப்படுத்துறது சகஜம் தானே? இவங்களும் இவங்க பக்கத்துல உள்ள சட்டி, பானை எல்லாம் எடுத்து சண்டை போட்டுக்கிட்டாங்க. அப்படி சண்டை போடும்போதுதான் பானையில் உள்ள கறி குவா பட்டணத்துல ஊற்றப்பட்டது.
இனி அடுத்தடுத்து பதிவுகளில் வரப்போகும் இடங்களான அயேர் ஹாங்காட் (Ayer Hangat) [Hot Water] மற்றும் பெலாங்கா பேச்சா (Belanga Pecah) [Broken Crockery] இடங்களின் பெயர்களும் இந்த கதையினால் வந்ததுதான். பானை உடைஞ்சு, சுடுத் தண்ணீர் ஊற்றி எல்லாம் நடந்த பிறகுதான் இவர்கள் இருவரும் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக மலையாக மாறிவிட்டார்கள். நீங்கள் இந்த மலைக்கு போனால் (கண்டிப்பாக இந்த இடத்துக்கு சீக்கிரமே கூட்டிட்டு போறேன் இந்த தொடர்ல) இந்த இரண்டு மலைகளுக்கும் நடுவில் ஒரு குன்று இருக்கும். இந்த குன்றாக இருப்பவரின் பெயர் மாட் சாவார் (Mat Sawar). ரெண்டு ராட்சச மனிதர்களும் அடித்துக்கொள்ளும்போது இவர்தான் இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் சமாதானப்பறவையாக இருந்தார். இவர்கள் இரண்டு பேரும் மலையாக மாறியபோதும், இவரும் கூடவே மலையாக மாறி இவர்கள் இருவருக்கும் இனி எப்போதும் சண்டையே வராமலிருக்க பாதுகாக்கிறார் என நம்பபடுகிறது.
இதேபோல லங்காவியில் நிறைய புராண மற்றும் விசித்திர கதைகள் இருக்கு. அந்தந்த இடத்துக்கு போகும்போது நானே சொல்கிறேன்.
இப்போது ஒரு முக்கிய கேள்வி. லங்காவில இருக்கும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்கு நமக்கு வாகனம் வேணுமே! அதுக்கு என்ன பண்றது? கவலையே இல்லை. முதல்ல நின்ன இடத்துக்கே கொஞ்சம் திரும்ப வாங்க.. "சார், ஹோட்டல் வேணுமா? கார் வேணுமா? டூர் பேக்கஜ் இருக்கு. சூப்பர் பேக்கஜ்"ன்னு கூவுறது உங்க காதுகளில் விழுதா? அப்படியே அவர்க்கிட்ட போய் கொஞ்சம் பேச்சு கொடுப்போம்.
இங்கே உங்களுக்கு ஒரு காரும் லங்காவி மேப் இருந்தாலே போதும். ஊர் முழுக்க சொந்தமாகவே சுற்றிடலாம். கார் வாடகை ஒரு நாளைக்கு RM50-RM80 வரை கிடைக்கும். மோட்டார் சைக்கிள் குறிப்பா ஸ்கூட்டர் வகை மோட்டார்கள் மிகவும் மலிவு விலை வாடகைக்கு கிடைக்கும். கார், மோட்டார் ஓட்டத்தெரியலைன்னா கூட பரவாயில்லை.. சைக்கிள் கூட வாடகைக்கு கிடைக்கும். :-)
இல்ல. எனக்கு டூர் பேக்கஜோ, பஸ் வாடாகையோ இல்லை ட்ராவெல் வேன் வேணும்ன்னு சொல்றவங்களும் உங்களுக்கு நீங்கள் கேட்கும் சர்வீஸ் கண்டிப்பாக கிடைக்கும். இப்போ ஏதாவது ஒரு வாடகை வண்டியை எடுத்துட்டு ஒரு ஹோட்டல் செல்வோம் வாங்க. ஹோட்டல் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டிய தேவை இல்லைன்னு நினைக்கிறேன். ஹோட்டல் இங்கு மிக சுலபமாக கிடைக்கும் ஒரு வசதி. ஹோட்டல்ல உங்க மூட்டை முடிச்சுகளை கழற்றி வச்சதும் அடுத்த இடத்துக்கு சுற்ற கிளம்புவோமா?
ஓகே.. இப்போ குவா பட்டணத்தில் உள்ள மற்ற சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்ப்போம். நாம் இப்போ போக போற இடம் லேஜேண்டா பூங்கா (Taman Legenda). அமைதியான சுற்று சூழலை விரும்புவோர் இந்த இடத்தை கண்டிப்பாக விட மாட்டாங்க. இந்த பூங்கா 50 ஏக்கர் நில பரப்பை கொண்டது.இதில் திறந்த வெளி தொல்பொருட்காட்சி நிலையம் (Open Air Museum)-உம் உள்ளது. இந்த பூங்கா முழுதும் பூத்து குழுங்கும் பூக்கள், மரங்கள், இயற்கை காட்சிகள் எனரு நாம் நடக்கும் நடைப்பாதை முழுதும் அலங்கரித்திருக்கும். அது மட்டுமில்லாமல் லங்காவி லெஜெண்ட்ஸ் என்று சொல்லப்படும் பல அரிய மரங்கள் மற்றும் செடிகள், பூக்கள் என பார்க்கலாம்.
குவாவில் உள்ள இன்னிரு சுற்றுலா தளம் என்றால் அது CHOGM Park. 1989-இல் நடந்த காமன்வெல்த் மீட்டிங் போது ஸ்பெஷலாக கட்டப்பட்ட பூங்கா இது. இன்று வரை 1989-இல் கலந்துக்கொண்ட எல்லா நாட்டு கொடியும் அங்கே ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பினால் இது ஒரு நல்ல பூங்கா.
அடுத்து நாம் வேற இடத்துக்கு பயணிப்போம். கூட பயணம் செய்ய நீங்கள் தயாரா?
Saturday, January 12, 2008
லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -1
லங்காவி என்றதும் இது எந்த இடம்ன்னு உங்களுக்கு கேள்வி இருக்கும். 1999-இல் வெளியாகி சக்கை போடு போட்ட Anna and The King படம் ஞாபகம் இருக்கா? இது தாய்லந்து நாட்டின் ராஜ பரம்பரை கதை. இந்த படம் முழுதும் லங்கவியில்தான் எடுக்கப்பட்டது. பீட்டர் படம் பார்க்காதவங்களா நீங்க.. சரி, அப்போ பில்லா 2007 பார்த்தீங்களா? இந்த ப்டத்திலேயும் சில காட்சிகள் லங்காவியில் எடுக்கப்பட்டதுதான். மலேசியாவில் மிகவும் சுத்தமான, அழகான இடம் என்றால் அது லங்காவிதான்..
தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியதுதான் லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இடத்தில்தான் லங்காவி தீவு இருக்கிறது என்பது ஒரு ஸ்பெஷலிட்டி. இந்த தீவுகளிலேயே பெரிய தீவைத்தான் லங்காவி என்றைக்கிறோம். லங்காவி தீவு பினாங்கு தீவை விட மிகப் பெரியது.
லங்காவி அருகில் பல குட்டி குட்டி தீவுகள் இருக்கின்றன. லங்காவி வருபவர்கள் Island Hopping எனும் சுற்றூலா பேக்கேஜ் எடுத்து மற்ற சில தீவுகளுக்கும் போவது வழக்கம். (இதைப்பற்றி பிறகு விளக்குகிறேன்).
தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு 30 கிலேமீட்டர் கடலில் பயணம் செய்தால்தான் இந்த தீவுக்கு வந்து சேர முடியும். இந்த தீவு கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக கருதப்படுகிறது. ஆனாலும் இது தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. நீங்க இந்த தீவுக்கு வரும்போது உங்க செல்பேசியில் மலேசியா மற்றும் தாய்லாந்து தொலைதொடர்பு சிக்னல் மாறி மாறி காட்டும்.
வாங்க ஊர் சுத்தலாம்ன்னு கூப்பிட்டுட்டு கதை பேசிட்டு இருக்கேன்னு நீங்க நினைக்கலாம். ஆனாலும், இந்த மாதிரி தகவல் உங்களுக்கு பின்னால் இந்த இடத்தை சுற்றிப்பார்க்க வரும்போது உதவுமில்லையா? நீங்க சுற்றுலா சென்றாலும் ஒருத்தர் மைக்கை பிடிச்சுக்கிட்டு இதைத்தானே சொல்ல போறார்.. அதான் நான் முந்திக்கிட்டேன். சரி, வாங்க தொடரலாம். :-)
லங்காவி (Langkawi) என்பது மலாய் வார்த்தையிலிருந்து உருவாகப்பட்டது. லாங் (Lang) என்பது பருந்தை குறிக்கும். காவி (Kawi) என்பது காவி வண்ணத்தை குறிக்கும். ஒரு சிவப்பு கலந்த சாக்லேட் வர்ண (காவி வர்ண) பருந்து ஒன்று ஒரு கல்லை கொத்துவதை ஒரு மீனவன் பார்த்த கதை ஒன்று இருக்கிறது இங்கே. அதன் அடிப்படையாக கொண்டுதான் லங்காவி என்ற பெயர் வந்தது என்றும் சொல்கின்றனர்.
இதே தீவில் பல மர்ம கதைகளும், லெஜெண்ட் கதைகளும் உள்ளன. அதனால், இந்த தீவு லெஜண்ட் தீவு (Legendary Island) என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான புராண கதை (Legendary story) என்று சொன்னால் மசூரி என்ற பெண்ணை பற்றிய கதை. அது என்ன கதைன்னு பின்னால் பார்க்கலாம்.
ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேனே! லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone) என்றும் அழைக்கப்படுகிறது. பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். அதனால், சுற்றுப்பயணிகள் பலர் இதை சொர்க்க பூமி என்றும் அழக்கிறார்கள். நீங்கள் மினிமம் 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அழிக்கப்படும்.
லங்காவியில் என்ன ஸ்பெஷல்ன்னு பார்க்கிறதுக்கு முன்னே எப்படி லங்காவிக்கு போகலாம்ன்னு பார்ப்போமா? என்னுடன் பயணத்தில் இணைய நீங்க தயாரா?
லங்காவி அனைத்துலக விமான நிலையம் பாடாங் மத்சீராத் (Padang Matsirat)-ல இருக்கிறது. நீங்கள் குவாலா லும்புர் அனைத்துல விமான நிலயத்திலிருந்து (KLIA) MAS அல்லது Air Asia விமானம் மூலமாக சென்றால் 55 நிமிடத்தில் நீங்கள் லங்காவி வந்தடைவீர்கள். சிங்கப்பூரிலிருந்து Silk Air விமானமும், சீனாவிலிருந்து China Airlines விமானமும், தாய்வானிலிருந்து Eva Air விமானமும் நேராக லங்காவி போகிற வசதியும் உண்டு. லண்டன் மற்றும் நியூ யோர்க்கிலிருந்தும் லங்காவி செல்கிற விமானங்கள் இருக்கின்றன.
ஆனால், எனக்கு பிடித்தது ஃபெர்ரி (Ferry) சவாரிதான். குவாலா லும்புரிலிருந்து நீங்கள் லங்காவி போவதென்றால் பேருந்து மூலமாக குவாலா கெடா (Kuala Kedah) அல்லது குவால பெர்லிஸ் (Kuala Perlis)-கு செல்ல வேண்டும். கெடா அல்லது பெர்லிஸ்க்கு நீங்க் ரயில் மூலமாக கூட போகலாம்.
பேருந்து மூலமாக பயண தூரம்:
குவாலா லும்புர் - குவாலா கெடா - 6 மணி நேரம்
குவாலா லும்புர் - குவாலா பெர்லிஸ் - 7 மணி நேரம்
என்ன விலை என்று கேட்குறீர்களா? மலிவுதாங்க.
பெரியவர்: RM 15
குட்டீஸ்: RM 10
குவாலா கெடாவிலிருந்து நீங்க ஃபெர்ரி ஏறினால் 1 மணி 30 நிமிடத்தில் குவா ஜெத்தியில் (Jeti Kuah) வந்து சேருவீர்கள்.
ஓக்கே.. இப்போ நாம் லங்காவி தீவு வந்தடைந்தாச்சு.. டீ, காப்பி சாப்பிடவங்கல்லாம் கொஞ்சம் பிரேக் எடுத்து சாப்பிட்டு வாங்க.. நம் பயணத்தை தொடரலாம்.
அடுத்து நாம் லங்காவியில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா தளங்களுக்கும் போகலாம். நீங்கள் தயாரா?






























