Tuesday, August 26, 2008

திரெங்கானு பயணம் - 2

மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன.



அடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.

திரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

Monday, August 25, 2008

திரெங்கானு பயணம் - 1


இரவு முழுவதையும் மின்னலுக்கும் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் அமுத மொழிகளுக்கும் இரையாக்கிவிட்டமையால் காலை வரை தூங்காமலே கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் (KLIA) கிளம்பி விட்டேன். KLIA செல்லும் வரை என் மூளைக்கு உறைக்கவே இல்லை ஒரு விசயம். KLIA ஒன்றும் எனக்குப் புதிதல்லதான். நெருக்கமான சில நண்பர்களை வழியனுப்ப வந்த நினைவுகள் இன்னமும் ஈரமாய் நெஞ்சில் உள்ளது. கூடவே அவர்களின் பிரிவு ஏற்படுத்திய வலியும், இனி எப்போது சந்திப்போம் என்று தெரியாமலே விடைப்பெற்ற தருணங்களும் இன்றும் நீக்கமற நிலைத்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பகாங் மாநிலத்திலுள்ள Kuala Tahan சென்றிருந்தப் போது அங்குள்ள தேசியப் பூங்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு நண்பர்களுடன் Canopy Walk செல்ல முற்பட்ட போதுதான் ஒரு விசயம் உறைத்தது. உயரம்...ஆம் உயரம் 40 மீட்டர் உயரத்தில் 500 மீட்டர் தூரத்தைக் கொண்ட தொங்கும் பாலத்தில் அந்தப் பூங்காவையே சுற்றி வர வேண்டும். அட இது என்ன பெரிய கம்ப சூத்திரமா சின்ன வயதில் வீட்டு மாமரம் ஏறிய நினைவில் சரியென்று ஏறியும் ஆகிவிட்டது. அதற்குப் பின்புதான் தெரிந்தது திரும்பிப் போக முடியாத ஒரு வழி தடம் அது என்று. உயிர் பற்றிய பயம் அப்போதுதான் முதன் முதலாகத் தோன்றி மறைந்தது. கண்ணை மூடிக் கொண்டே எப்படியோ கடந்து வந்ததெல்லாம் இன்னமும் மறக்காத நிலையில் மறுபடியும் அந்தரத்தில் மிதக்க வேண்டுமா? ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று உள்ளம் ஆர்ப்பரித்தாலும் வேறு வழியில்லை. இதற்கு முன் விமான பயண அனுபவம் இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் அமைதி காக்க வேண்டியிருந்தது. காலையில் விமான நிலையத்திற்குக் கிளம்பும் சமயத்தில் வானொலியில் Spanair Flight JK5022 விபத்துக்குள்ளான செய்தி திகிலைப் பரப்பினாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை.


என்னத்தான் பயமென்றாலும் ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுக்க முடியவில்லை.? ஆனால் விமானம் கிளம்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் அட! உயரமாவது பயமாவது! கிட்டதட்ட 50 நிமிட பயணங்களுக்குப் பிறகு கோலாத்திரெங்கானு விமான நிலையத்தை அடைந்தப் பொழுது அதன் அழகு உண்மையிலேயே எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டது. மலாய் பாரம்பரிய அரண்மனை போன்ற தோற்றத்தில் அவ்விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அதன் அழகிய தோற்றத்திற்கு மேலும் மெறுகூட்டுகிறது என்றால் மிகையில்லை. திரெங்கானு மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பு அண்மையில் வடிவமைக்கப்பட்ட பளிங்கு(படிகம்) மசூதி. இரவு நேர சூழலில் அதன் அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆற்றோரமாய் அமையப் பெற்றிருக்கும் இந்த மசூதி தாஜ்மகாலை நினைவுப்படுத்திச் செல்கிறது. அடுத்து திரெங்கானு மாநிலத்தில் அவசியம் காண வேண்டிய இடம் இஸ்லாமிய நாகரிக பூங்கா. தற்பொழுது இங்கு நடைப்பெற்றும் வரும் உலக திருக்குரான் ஓதும் போட்டி இன்றோடு ஒரு நிறவை எய்துகிறது.

திரெங்கானு மாநிலத்தின் மிகப் பெரிய சிறப்பு "Batik" துணி வகையாகும். மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் கிடைக்கப் பெறும் இந்த வகைத் துணிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமை பாத்தேக் துணி அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.