Monday, May 28, 2007

ஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்

சுமார் 16 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் ஒன்பதாவது சித்ராவர்ணா மலேசியா நேற்று முன்தினம் புத்ராஜெயாவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோலாகலமாக தொடக்கிவைக்கப்பட்டது.



'ஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்' என்ற கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டு சித்ராவர்ணா மலேசியாவை பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அதிகாரப்புர்வமாகத் தொடக்கிவைத்தார். சித்ராவர்ணா தொடக்கவிழா நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புத்ராஜெயா நீதிமன்ற வளாக கட்டத்தின் முன்புறம் திரளாகத் திரண்டனர்.

நேற்று முன்தினம் 6.30 மணிக்கு புத்ராஜெயா பொலிவார்ட்டில் கண்கவர் அணிவகுப்பு, நடனக் காட்சிகள், உள்நாட்டு தயாரிப்பிலான ஆடைகள் கண்காட்சி, சைக்கிள் சாகசக் கண்காட்சிகளுடன் சித்ராவர்ணா நிகழ்வு தொடங்கியது. இரவு 8.00 மணியளவில் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களின் வரவேற்புடன் பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.



மலாய், சீன, இந்திய மூவினத்திலிருந்து 100 பேர் மிகப் பெரிய மத்தாளத்தை அடித்து வந்திருந்த பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். பூர்வ குடியனரின் முகமூடி நடனமும், சபா மக்களின் அறுவடை நாள் நடனமும், சபா வாழ் மக்களின் வீரர் தின நடனமும் இதில் இடம் பெற்றிருந்தன. அதுமட்டுமின்றி, மலாய், சீன, இந்திய, சியாம், போர்த்துகீள் சமுதாயத்தினரின் பாரம்பரிய நடனங்களும் வந்திருந்த பார்வையாளர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

முதல்நாள் நிகழ்வின் உச்சக்கட்டமாக அனைத்து நடனங்களிலும் பங்கேற்ற சுமார் 1,800 நடனக் கலைஞர்களும் ஒரு சேர மேடையில் தோன்றி சித்ராவர்ணா நிகழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். அதனைத் தொடர்ந்து, சுமார் ஐந்து நிமிடங்கள் வரை வாணவெடிகள் வெடிக்கப்பட்டு முதல் நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.



கடந்த சனிக்கிழமை மே 26-ஆம் தேதி தொடங்கிய சித்ராவர்ணா நிகழ்வு ஜூன் 10-ஆம் தேதி வரையில் 16 நாட்களுக்கு நடைபெறும்.

இவ்வாண்டு மலேசியாவின் 50-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள சித்ராவர்ணா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதன் தொடர்பில், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகள், சுற்றுலா மையங்கள், பேரங்காடிகளில் மிகப் பெரிய அளவிலான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


மலாய் படிக்கலாம் வாங்க - பாகம் 3 செமெஸ்டர் லீவு முடிந்து இந்த வார இறுதியில் திரும்ப ஆரம்பம் ஆகிறது விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!

Tuesday, May 15, 2007

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்..

ஜில்லென்று ஒரு மலேசியாவில் ஜில்லுன்னு பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டிருக்கும் நாங்கள், மலேசிய கலைஞர்களையும் இங்கே அறிமுகப்படுத்த போகிறோம்.

ஏற்கனவே திலிப் வர்மனைப் பற்றியும், அவரின் உயிரைத் தொலைத்தேன் பாடலைப்பற்றியும், பூமெராங்-x குழுவைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

பிறந்த நாள் பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல். ஒரு காதலன் தன் காதலியின் பிறந்த நாளை தன்னுடைய சிறந்த நாளாக எண்ணி பாடுகிறான். மிதமான இசையில் வார்த்தைகள் தெளிவாக கேட்கிறது.
இந்த பாடலை பாடியவர்களின் குழுவின் பெயர் அப்பாச்சியன் (Apachean).


இவர்களின் முதன் இசை தொகுப்பு "முதல் முதலாய்" என்ற தொகுப்பில் அமைந்த பாடல். R&B இசையில் ஆர்வமுள்ள இந்த இளைஞர்களின் முதல் தொகுப்பே இப்படி வெற்றி கரமாய் அமைந்தது. காதல், தாய் பாசம், பிறந்த நாள் வாழ்த்து, தமிழனின் குரல், மற்றும் அவர்களின் அறிமுகம் என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாய் இருக்கின்றது. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.

அதுவரை.. நீங்கள் இந்த பாடலை கேட்டு கீழே உள்ள வரிகளை படித்து மகிழுங்கள்:

Apachean-PiranthaNaal...


மலருக்கின்று பிறந்த நாள்..
என் மனதை திறந்த நாள்..
நிலவுக்கின்று நிறைந்த நாள்..
என் நினைவில் நிலைத்த நாள்..
பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..

25 ஆகஸ்ட்டில் உன் பிறந்த நாள்..
பிறந்த நாள்..
பூமி மடியில் முதன் முதலாய்
நீ தவழ்ந்த நாள்..
25 ஆகஸ்ட்டில் உன் பிறந்த நாள்..
பிறந்த நாள்..
பரிசு எந்தன் உயிருனக்கே நான்
கொடுத்த நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
என் வாழ்வில் சொர்க்கம் தழுவும் நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
என் உறவும் உன்னால் உயர்ந்த நாள்..
பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
ஓஓஓ..
(மலருக்கின்று..)

வருடப்பிறப்பு எனக்கே உந்தன் பிறந்த நாள்..
பிறந்த நாள்..
ஆண்டுதோறும் என் மனதில் நீ படர்ந்த நாள்..
இருவரல்ல ஒன்றில் ஒன்றாய் இணைந்த நாள்..
இணைந்த நாள்..
ஆக மொத்தம் எனக்கெனவாக பிறந்த நாள்..
பிறந்த நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
என் பிறவி பயனை அடைந்த நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
நான் தவமிருக்கும் போல் இனிய நாள்..
பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்.
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
ஓஓஓ...
(மலருக்கின்று..)

பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
நான் என்னை மறந்த நாள்..

இந்த பதிவு இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் தங்கை / ஜில்லென்று ஒரு மலேசியாவின் இன்னொரு பாதியான துர்காவுக்கு பரிசளிக்கிறேன்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா!

இந்த மலர் நோய் நொடியின்றி தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)

Monday, May 7, 2007

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 2

க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்...... க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்......

டீச்சர் அவங்க புத்தகங்களையும் கோப்புகளையும் தூக்கிக்கிட்டு வகுப்புக்குள் நுழைகிறார்.

செலாமாட் பாகி செக்குன்னு க்ளாஸே இடிந்து விழும் அளவுக்கு சவுண்டா கத்துறாங்க மாணவர்கள்.

டீச்சருக்கு ஒரே திகைப்பு.. வகுப்பு நிறைஞ்சு இருக்கு.. பசங்களும் பொண்ணுங்களும் இடம் இல்லாம நிக்குறாங்க.. ஒரு 50 பேருக்கு மேலே இருப்பாங்க போல .. மூனு வயசு பாப்பாவிலிருந்து (அபி ) ஐம்பது வயது பாட்டி (அது யாருன்னு நானே சொல்லணுமாக்கும்) இருக்காங்க..

ம்ம்.. என்ன பண்ணலாம்? சரி , கேண்டின்லதான் இடம் தாராளமாகவும் மேஜை நாற்காலியெல்லாம் இருக்கு.. வகுப்பை அங்கே மாற்றிடலாம்ன்னு முடிவு செய்து எல்லாரும் அங்கே உட்கார்ந்தாச்சு.

"மாணவர்களா, இன்றைய பாடத்துக்கு போறதுக்கு முன், போன வாரம் என்ன படிச்சோம்ன்னு பார்க்கலாமா?"

மாணவர்கள் கோரசாக "ஓகே செக்கு!"

"சினேகிதி, நீ உனக்கு தெரிஞ்சதை சொல்லு"

"ம்ம்.. அப்பா காபார் - காபார் பாயிக் செக்கு "

"கார்த்தி, இதுக்கு என்ன அர்த்தம்ன்னு நீ சொல்லு"

"அது நலமான்னு கேட்குற கேள்வியும் அதுக்கான பதிலும் செக்கு"

"ஓகே.. சந்தோஷ், நீ ஒன்னு சொல்லு!"

"ஒன்னு செக்கு"

"என்னடா சொல்ற?"

"நீங்கதானே ஒன்னுன்னு சொல்ல சொன்னீங்க?" என்று அப்பாவியாக கேட்க..

"ம்ம்.. நீ வீட்டுப்பாடம் செய்யவே இல்லை!!! அங்கே ஓரமா போய் நின்னு மனப்பாடம் பண்ணிட்டு வா?"

"கோப்ஸ், நீ உனக்கு தெரிஞ்சதை சொல்லு?"

"செலாமாட் பெட்டாங், செக்கு?"

"கோப்ஸ், உன் உச்சரிப்பில் பிழை இருக்கு.. அது செலாமாட் பெத்தாங். திரும்ப ஒரு முறை சொல்லு பார்ப்போம்?"

"செ... செ.. செலாமாட் பெத்தாங்"

"குட்.. அடிக்கடி இந்த உச்சரிப்புகளை சொல்லி பழகு.. எல்லாமே சுலபமாக இருக்கும்!"

அதுக்குள்ள மங்கை கைதூக்கி

"செக்கு, எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு . நானே எல்லாத்தையும் சொல்லவா?"ன்னு கேட்க

"சரிம்மா. நீயே சொல்லு?"

மங்கை முதல் க்ளாஸுல படித்த எல்லாவற்றையும் சரியா சொல்கிறார்..

"க்ளாஸ் பாருங்க.. மங்கை மட்டும்தான் படித்த பாடத்தை சரியா செஞ்சிருக்கா .. எல்லாரும் மங்கையை போல இருக்கனும் சரியா? மங்கைக்கு எல்லாரும் ஒரு பலத்த கைத்தட்டு கொடுங்கப்பா! சரி,மாணவர்களே இன்றைய பாடத்துக்கு போலாமா? இன்று நாம் எண்கள் கற்றுக் கொள்ளலாம்".

அப்போதுதான் அருண் க்ளாஸுக்கு வர்றார்..

"அருண், இன்னைக்கும் லேட்டா நீ?"

"செக்கு, நான் வரும்போது என் சைக்கிள் விபத்துல மாட்டிக்கிச்சு.. அதான் லேட்டு செக்கு!"

"ம்ம்.. இப்படி ஓவர் பில்டப் கொடுத்துதான் எப்போதும் நீ மாட்டிக்கிற.. ஏதாவது நம்புற மாதிரி சொல்லக்கூடாதா நீ? உனக்கு தண்டனை கொடுக்கணுமே! சரி, இந்த போர்ட்'லே ஒன்றிலிருந்து பத்துவரை எழுது"

அருண் போர்டு முன் நின்னு பேந்த பேந்த முளிக்கிறார்.

"என்னடா? ஒன்னு ரெண்டு மூனு கூட தெரியலையா உனக்கு? ம்ம் .. உனக்கு உதவி செய்ய இந்த வகுப்பிலிருந்து யாரையாவது கூப்பிடுக்கோ!"

"செக்கு, நான் நாட்டாமையை கூப்பிடுறேனுங்க."

"யாரு இங்க நாட்டாமை?"

"அட, நம்ம ஸ்யாம்தான்"

"ம்ம்.. நீ திருந்தவே மாட்டியா? அவனே எலி வால் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கான் .. இவனா எழுத போறான்?.. சரி, ஸ்யாம் ... அருணுக்கு உதவி செய்.."

ஸ்யாம் கெத்தா எழுந்திருச்சு முன்னே நடந்து போய் நிக்குறார்.. தன்னோட உள்ளங்கையில எழுதி வச்சிருக்கிற பிட்டா காப்பியடிச்சு காப்பியடிச்சு பத்து வரைக்கு எழுதி முடிக்கிறார்.

"ஸ்யாம், அருண்.. போய் உட்காருங்க.."

"க்ளாஸ்.. ஒன்றிலிருந்து பத்து வரை மலாயில்..

1-சத்து - Satu
2-டூவா - Dua
3-தீகா - Tiga
4-எம்பாட் - Empat
5-லீமா - Lima
6-எனாம் - Enam
7-தூஜோ - Tujuh
8-லாப்பான் - Lapan
9-செம்பிலான் - Sembilan
10-செப்பூலோ - Sepuluh

ன்னு உச்சரிக்க வேண்டும்"


numbers.mp3


"சுமதி, எட்டு எப்படி மலாயில் சொல்வது?"

"துப்பான் செக்கு"

"சுமதிக்கா, துப்பனும்ன்னா அதோ அங்கே ஓரமா போய் துப்பிட்டு வாங்கக்கோய்!" ன்னு ஜி3 சொல்ல..

அபி பாப்பா, "உனக்காவது மலாயில் எட்டு என்னனு சொல்ல தெரியுமா செல்லம்?"ன்னு டீச்சர் கேட்கிறாங்க.

"என்ன டீச்சர் இப்படி கேட்டுட்டீங்க.. ஏழு தூஜோன்னு சொல்வாங்க.. ஒன்பது செம்பிலான்னு சொல்வாங்க.. எட்டு என்னனு அதோ அந்த தோட்டக்காரரு சொல்வாரு.."

டீச்சர் நிமிர்ந்து பார்க்குறார்ங்க.. அங்கே தோட்டக்காரர் ஆணியை பிடுங்காம திருட்டு முழி முழிச்சிட்டு நிக்குறார்.. (அவரு வேற யாரும் இல்லைங்க.. அபியோட அப்பாதான் அவரு)

"தோட்டக்காரரே, உங்களுக்கும் இந்த வகுப்பில் சேரணுமா?"

தோட்டக்காரர் தலையை மேலும் கீழுமா ஆட்ட..

"சரி, எட்டுக்கு மலாயில் என்னனு கரேக்டா சொன்னீங்கன்னா உங்களுக்கு அட்மிஷன் கொடுக்கலாம்"

"லீப்பான் செக்கு.. கரெக்ட்டா?"

"லீப்பானா? அப்படின்னா என்ன அர்த்தம்ன்னு உங்களுக்கு தெரியுமா? லீப்பான்னா பூரான்னு அர்த்தம்"ன்னு டீச்சர் நொந்துக்கிட்டு..

"சரி சரி.. நீங்களும் க்ளாஸுல ஒரு ஓரத்துல உட்காருங்க.. க்ளாஸ் , எட்டை லாப்பான் என்று சொல்ல வேண்டும்.. திரும்ப சொல்லுங்க பார்ப்போம்?"

மாணவர்கள் கோரஸாக, "லாப்பான்"

"ஸப்ப்பாஆஆஆ.. இப்பவே கண்ணை கட்டுதே எனக்கு!! க்ளாஸ் , இன்றைய பாடம் இதோடு முடித்துக் கொள்வோம். நீங்க ஒன்றிலிருந்து பத்து வரை முதல்ல கத்துக்கிட்டு வாங்க. அப்புறமா நான் வேற எண்கள் சொல்லி தர்றேன்."

"க்ளாஸ் முடிக்கிறதுக்கு முன்னே ஒரு கேள்வி.. கோபி, இப்போது உன் கடிகாரத்துல மணி என்ன ?"

"மணி 10.10 காலை செக்கு"

"அதை அப்படியே மலாயில் சொல் கோபி"

"ம்ம்.. ம்ம்.. செப்பூலோ செப்பூலோ பாகி , செக்கு"

"சரியாக சொன்னே கோபி. வாழ்த்துக்கள்"

"சரி, மாணவர்களே! இந்த வாரமும் நான் உங்களுக்கு தனியாக வீட்டுப் பாடம் தரபோவதில்லை! வீட்டுல போய் போன வார பாடத்தையும் இந்த வார பாடத்தையும் படித்துட்டு வாங்க. அடுத்த வாரம் சந்திப்போம் மாணவர்களே! எல்லாரும் சந்தோஷமா போயிட்டு வாங்க"

மாணவர்கள் கோரஸாக "தெரிமா காசே செக்கு"