Wednesday, May 14, 2008

செலாமாட் ஹாரி ஜாடி துர்கா


தங்கச்சி, இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ பிறார்த்திக்கிறேன். கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்! உனக்காக சிறப்பாக மலாயில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடலை பாடுகிறேன். :-)


Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi Thurgah
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Tuesday, May 13, 2008

ஆசியாவின் இரகசியம்'ஆசியாவின் இரகசியம்' என்று கருதப்படும் சரவா அல்லது சரவாக் (Sarawak) மாநிலம் இன்று தன் இரகசிய விளிம்புகளிலிருந்து விடுப்பட்டு உலக பார்வையை தன் வசம் கவர்ந்து வருகின்றது. கலை, கலாச்சாரம், இசை, மர்மம், சரித்திரம் என்று இம்மாநிலத்தின் சிறப்பு நீண்டுக் கொண்டே போவது நமக்கொன்றும் ஆச்சரியமில்லைதான்.அதிலும் மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சரவா தீபகற்ப மலேசியாவைப் பிரிந்து போர்னியோ தீவில் அமைந்துள்ளது. கிட்டதட்ட 131, 587 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ள சரவா பரப்பளவில் தீபகற்ப மலேசியாவை ஒத்திருந்தாலும் அதன் நிலத்தின் பெரும்பான்மை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. சரவா மாநிலத்தின் தட்பவெப்ப நிலை வருட முழுவதும் 23 பாகை செல்சியஸிலிருந்து 32 பாகை செல்ஸியாகவே உள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு கடுமையான வெயிலாக இருந்தாலும் சுற்றிலும் அடர்ந்துள்ள காடுகள் கோடை வெப்பத்தின் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தியே வருகிறது. அத்தோடு 3300மி.மீட்டரில் இருந்து 4600 மி.மீட்டர் வரை இங்கு வருடம் முழுவதும் மழை பெய்வது விவசாயத்திற்கு மட்டுமல்லாது சூடான சீதோஷண நிலைக்கு பெரிதும் பங்காற்றுகிறது.
மனிதகுலத்தின் பொக்கிஷமான மழைக்காடுகளை(Rainforest) சூழ்நிலை மண்டலமாக கொண்டுள்ள இம்மாநில மக்களின் நீண்ட வீடுகள் உலகப் புகழ்பெற்றதாகும். மிகவும் தொன்மை வாய்ந்த இம்மழைக்காடுகள் கிட்டதட்ட 27 வகை பூர்வக்குடியனரின் வாழுமிடமாக உள்ளது அதன் மற்றுமொரு சிறப்பாகும். அவர்களில் ஈபான், காயான், மூருட், கெஞ்சா, கெனாவிட், கெடாயான், மெலானாவ், கெலாபிட், டாயாக், பெனான் மற்றும் பலர் அடங்குவர்.


வரலாறு
தொல்பொருளியலாளர்களின் ஆய்வின்படி புதிய கற்காலப் பண்பாடு இம்மாநிலத்தில் கி.மு 600க்கும் முன்பே தொடங்கி மனிதர்கள் நியாஹ் குகைகளில் (Niah Cave) வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற கோடாரி, கத்தி, சுத்தியல் போன்ற கற்கருவிகளைக் தொல்பொருளியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மேலும், சரவா மாநிலம் புருணை நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக வரலாறுகள் பகர்கின்றன. 1832 ம் ஆண்டுக்கு முன்பாகவே புருணை சுல்தான் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த ஷாரிப் சாஹாப் என்பவரை சரவா மாநிலத்திலுள்ள சுங்கை செக்ராங்கிற்கு மாவட்ட ஆட்சியாளராகவும் பின்பு சாடுங் மாவட்ட ஆட்சியாளராகவும் நியமித்தாக சான்றுகள் கூறுகின்றன. இதையடுத்து 1836-ல் பங்கேரான் மாகோத்தா என்பவரை புருணை சுல்தான் மாநில ஆட்சியாளராக அனுப்பி வைத்திருந்தார். அப்போது அம்மாநில மக்கள் டத்து பாத்திங்கி அலி என்பவரை தலைவராக கொண்டிருந்தனர். புதிதாக பதவியேற்ற பங்கேரான் மாகோத்தாவும் அவரது ஆட்களும் அம்மாநில மக்களிடம் புரிந்த அட்டூழியங்களை கண்டு சகிக்காத டத்து பாத்திங்கி அலி அம்மாநில மக்களின் ஒத்துழைப்போடு பங்கேரான் மாகோத்தாவை எதிர்த்துப் போரிட்டார். இந்நிலையை அறிந்த அப்போதைய புருணை சுல்தான் உமர் அலி சைபுடின் இப்பிரச்சினையை கையாள பங்கேரான் மூடா ஹாஷிம் என்பவரை அனுப்பி வைத்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த பங்கேரான் மூடா ஹாஷிம் ஆங்கிலேய பிரபுவான ஜேம்ஸ் புரூக்கின் (James Brooke) உதவியை நாடினார். அதற்கு ஈடாக சரவா மாநிலத்தின் தற்போதைய தலைநகராக திகழும் கூச்சிங்கையும், செர்னியாவானையும் தருவதாக ஒப்பந்தமானது.


டிசம்பர் மாதம் 1840-ல் டத்து பாத்திங்கி அலி புரூக்கிடம் சமாதானம் கோரி சரணடைந்ததை தொடர்ந்து 24 செப்டம்பர் 1841இல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் இராஜாவாக நியமிக்கப்பட்டார். 11 மார்ச் 1868இல் ஜேம்ஸ் புரூக் தம்முடைய 65ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமானார். அவரையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் புரூக் சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக பதவியேற்றார். இவருடைய ஆட்சியின்போதுதான் கூச்சிங் நகரம் ஆகஸ்டு மாதம் 1872இல் சரவாக்கின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று வரையிலும் இருந்து வருகிறது. சார்லஸ் புரூக்கை தொடர்ந்து அவருடைய மகன் சார்லஸ் வைனர் புரூக் 22 ஜூலை 1918இல் சரவாக்கின் மூன்றாவது இராஜாவாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 1941இல் புதிய அரசியலமைப்பு சட்டத்தை சரவா மாநில அரசு அங்கிக்கரித்தது.

முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, 105 வருட புரூக் குடும்ப ஆட்சிக்குப் பிறகு, 1 ஜூலை 1946இல் சரவா மாநிலம் அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது. அன்று முதல் சரவா மாநிலம் பிரிட்டிஷின் மகுடத்துவ காலணியாக 15 செப்டம்பர் 1963 வரை இருந்து வந்தது. 16 செப்டம்பர் 1963இல் சரவா, சபா, சிங்கப்பூர், மலாயா கூட்டமைப்புடன் இணைந்து மலேசியாவாக உருவெடுத்தது.

அரசியல்
சரவா ஆளுநரை மாநிலத் தலைமையாகவும் முதல்வரை மாநில அரசின் தலைமையாகவும் கொண்டுள்ளது. சரவாக்கின் முக்கிய பகுதிகளாக கூச்சிங், சிபு, ஸ்ரீ அமான், மீரி, லிம்பாங், சரிக்கி, சமரகான் மற்றும் பிந்துலு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 25 மாவட்டங்களும் 29 சிறுமாவட்டங்களும் அடங்கும். மாநில அரசாங்க ஆட்சி மையம் பெட்ரா ஜெயாவில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்
வெட்டுமரத் தொழில் இம்மாநிலத்தின் முதன்மை தொழிலாகும். விவசாயம் இம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இம்மாநில மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவை நெல்பயிர், பால்மரம், செம்பனை, கருப்பு மிளகு, தென்னை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசியாகும். அதிலும் குறிப்பாக சமராகான் மற்றும் கலாக்கா சரிபாஸ்ஸில் அமைந்துள்ள மாபெரும் விவசாய திட்டத்தின் கீழ் 86000 ஏக்கரிலிருந்து 161000 ஏக்கர் வரை செம்பனை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசி பயிரிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் கலாச்சாரம்
பல்வேறு இனங்களை சரவா கொண்டிருப்பதால் கலை கலாச்சாரமும் பலவகையில் அமைந்துள்ளது. ஙஜாட் அலு, ஙஜாட் அரோ மற்றும் டத்தூன் ஜூலுட் வகை நடனங்கள் இம்மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். விவசாயம் இம்மாநில மக்களின் முக்கியத் தொழில் என்பதால் சரவாக்கியர்கள் காவாய்(Gawai) பெருநாளை அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அன்று மாநில விடுமுறையாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பெரும்பான்மையான சரவாக்கினர் கைவினைத் தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இது இம்மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. ஒரு வகை களிமண்ணால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் சரவா ஜாடிகள்(Sarawak Vase) இங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.
புவா (Pua) கைத்தறித் துணிகள் சரவா மக்களின் மற்றுமொரு சிறப்பாகும். இந்த புவா வகைத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வகை வண்ணங்கள் வேர், இலைகள், மரத்தோல் போன்ற இயற்கை பொருட்களை மூலதனமாக கொண்டுள்ளது. இவ்வகை துணிகளை முக்கியமான திருவிழாக்கள் மற்றும் திருமணத்தின்போது மட்டும்தான் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுலாத்தலங்கள்
சரவா கலாச்சார கிராமம்(வாழும் அருங்காட்சியகம்)
17 ஏக்கர் நிலத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கிராமம் ஒட்டுமொத்த சரவா மாநிலத்தையும் கையகப்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. மெலனாவ் இனத்தினரின் உயரமான வீடுகள், ஈபான், ஓராங் உலு மற்றும் பிடாயு இனத்தினரின் நீண்ட வீடுகள், பெனான் இனத்தினரின் குடில்கள் மற்றும் பல்வகை வீடுகளை இங்கு காண முடிகிறது. அத்தோடு பல்வகை கலாச்சார நடனங்கள், திருமண வைபவங்கள், ஆடல்கள் பாடல்கள், சிற்பக் கலைகளையும் இங்கு கண்டு மகிழலாம். பல்லின இசை அரங்கேற்றம் இங்கு நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபெறுகின்றன. அதிலும் உள்ளூரின் சிறப்பு உணவுவகைகளை இங்குள்ள கடைகளில் அவசியம் வாங்கி சாப்பிட்டு மகிழ வேண்டும். பொதுவாகவே சரவா மாநிலத்திற்குச் சென்றவர்கள் இங்கு செல்லாமல் திரும்புவதில்லை.


தேசியப்பூங்காக்கள்
மழைக்காடுகளை சூழ்நிலைமண்டலமாக கொண்ட மலேசியாவில் அதிகமான தேசியப்பூங்காக்களைக் கொண்ட மாநிலமாக இந்த சரவா மாநிலம் திகழ்கின்றது. அதில் மூலு மலைத் தேசியப்பூங்கா, பாக்கோ தேசியப்பூங்கா, நியாஹ் தேசியப்பூங்கா, காடிங் மலைத் தேசியப்பூங்கா அதிக புகழ்பெற்றவையாகும். வருடந்தோறும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். இந்த பூங்காக்கள் 500க்கும் அதிகமான உயிரினங்களை வாழிடமாக கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதில் கிப்போன், ஓராங் ஊத்தான், மான் போன்ற விலங்குகளும் இம்மாநில சின்னமான ஹொர்ன்பில் பறவைகளை இங்கு அதிகம் காணலாம். ராஜா புரூக் வகை வண்ணத்துப்பூச்சிகளும் உலகிலேயே மிகப் பெரிய மலரான ரஃப்லேசியாவும்(Rafflesia)இங்குதான் உள்ளது.


சரவா அருங்காட்சியகங்கள்
சரவா மாநிலத்தில் மட்டுமே பதினொன்று அருங்காட்சியகங்கள் அமைந்திருப்பது இம்மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பாகும். அவை ஒருங்கே பழைய சரவா அருங்காட்சியகம், துங்கு அப்துல் ரகுமான் அருங்காட்சியகம், இஸ்லாமிய அருங்காட்சியகம், சீன அருங்காட்சியகம், நியாஹ் தொல்பொருள் அருங்காட்சியகம், லிம்பாங் அருங்காட்சியகம், பாராம் அருங்காட்சியகம், நெசவுத்துறை அருங்காட்சியகம், 'மியாவ்' பூனை அருங்காட்சியகம், வெட்டுமர அருங்காட்சியகம் மற்றும் பாறைநெய்(Petroleum)அருங்காட்சியகமாகும். பொது மக்களின் பார்வைக்காக வாரத்தின் ஏழு நாட்களும் இவை திறந்தே உள்ளன. அனைத்து அருங்காட்சியங்களுக்கும் நுழைவு இலவசமாகும்.

அஸ்தானா அரண்மனையும் மார்கரித்தா கோட்டையும்
சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக விளங்கிய சார்லஸ் புரூக்கால் 1879இல் இந்த மார்கரித்தா கோட்டை கட்டப்பட்டது. தன் மனைவி மார்கரித்தா இராணியாரின் பெயரையே இந்த கோட்டைக்கு சார்லஸ் சூட்டியிருந்தார். சரவா நதியையொட்டிள்ள இந்த கோட்டை பார்ப்பவர் மனதையும் கொள்ளைக் கொள்கிறது என்றால் மிகையில்லை. இந்தக் கோட்டைக்கு அருகே அஸ்தானா அரண்மனை அமைந்துள்ளது.
தற்போது மாநில ஆளுநரின்(யாங் டி பெர்துவான்) அதிகாரத்துவ இருப்பிடமாக விளங்கும் இந்த அஸ்தானா அரண்மனையும் சார்லஸ் புரூக்கால் கட்டப்பட்டதுதான். தங்களின் திருமண பரிசாக இந்த அரண்மனையை தன் மனைவிக்கு சார்லஸ் பரிசளித்திருந்தார். பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு மாநில ஆளுநரின் வசிப்பிடமாக இன்றுவரை இருந்து வருகிறது.
கோவில்கள்
துவா பெக் கோங் சீனக் கோவில்
துங்கு அப்துல் ரகுமான் சாலையில் அமைந்திருக்கும் இக்கோவில் கூச்சிங்கிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோவில் 1843இல் கட்டப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமான குறிப்பேடுகளில் 1876 இல்தான் இக்கோவில் உருவாகியிருப்பதற்கான குறிப்புகளைக் காண முடிகிறது. இறந்தவர்களின் ஆவிகளைக் நினைவுக்கூறும் வாங் காங் திருவிழா இங்கு வெகுவிமரிசையாகக் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இம்மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வாழவில்லையென்றாலும் கூச்சிங்கிலுள்ள பிள்ளையார் கோவிலும் மாரியம்மன் கோவிலும் இந்து சமய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்துக்களை அடுத்து சீனர்களும் இக்கோவில்களுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
உலக மழைக்காடு இன்னிசை விழா (Rainforest World Music Festival)


ஒவ்வொரு வருடமும் நடந்தேறி வரும் இந்த இன்னிசை விழா பதினொறாவது முறையாக இவ்வாண்டும் ஜூலை 11ஆம் நாள் தொடங்கி 13ஆம் நாள் வரை சரவா கலாச்சார கிராமத்தில் நடைப்பெறவுள்ளது. போர்த்துகல், கொங்கோ, இந்தியா, அங்கோலா, கொலும்பியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாலஸ்தீன், கிரிஸ், பிரேசில், போலந்து, அமெரிக்கா மற்றும் யு.கே என்று உலகின் பலதரப்பட்ட மூலையிலிருந்து வரும் இன்னிசைக் குழுக்கள் இந்த இன்னிசை விழாவில் பங்கேற்கின்றன. இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுகள் மலேசிய ரிங்கிட் 45இல் இருந்து 250 வரை விற்கப்பட்டும் வருகின்றது. ஆர்வமுள்ளவர்கள் இதற்காக இப்போதிலிருந்தே பதிந்தும் கொள்ளலாம்.
அவசியம் பார்க்க வேண்டிய வேறு சில இடங்கள்:
கூச்சிங்
சந்துபோங் மீன்பிடி கிராமம்
சாத்தோக் சந்தை
சிபு
சிபு சிவிக் செண்டர் அருங்காட்சியகம்
லெம்பாங்கான் சந்தை
ஏழு மாடி பகோடா
தங்க முக்கோணம்
ஈபான் நீண்ட வீடுகள்
பிந்துலு
பிந்துலு மசூதி
ஜேபாக் கிராமம்
குவான் யின் தோங் சீனக்கோவில்
சரவா விவசாய (அ) வேளாண்மை பூங்கா
தும்பினா பூங்கா
தஞ்சோங் பத்து கடற்கரை
கிடுரோங் கோபுரம்
மீரி
முதலை பண்ணை
பாறைநெய் அருங்காட்சியகம்
லுவாக் விரிகுடா
பெராயா கடற்கரை
ஹாவாய் கடற்கரை
மலர்தோட்டம்

Saturday, May 10, 2008

மசூரி சமாதி (Makam Mahsuri)எத்தனை வருடங்கள் ஆனாலும், காலங்கள் கடந்தாலும் சில நிகழ்வுகள் காலத்தால் அழிக்க இயலாது. அது போலத்தான் மசூரிக்கு நடந்த கொடுமையும்.

அடடே. மசூரி யாரு? எதுக்கு இப்போது அவரை பற்றி பேசுறேன்னு பார்க்குறீங்களா? தொடர்ந்து படியுங்கள். இவர் எப்படி லங்காவியின் தாழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்று தெரிய வரும்.

பரம்பரையோ அல்ல பணக்கார வர்கத்தையோ சார்ந்தவர் அல்ல. ஒரு ஏழைபல நூறு வருடத்துக்கு முன்னே மசூரி என்பவர் லங்காவி சுற்றுவட்டாரத்திலேயே பெரிதும் பேசப்பட்டவரில் ஒருவர். அவர் ராஜ குடும்பத்தில் பிறந்த ஒரே மகள். ஒரு தடவை பார்த்ததும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் அழகு. அதுமட்டுமா? அவருடைய குணங்களும் மிகவும் போற்றக் கூடியவை. அவர் பெற்றோர்கள் வளர்ப்பில் நல்ல குணங்களை கற்றரிந்தார். பெரியவர்கள் மீது மரியாதை, தானே முன் வந்து மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், என்று அவருடைய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விருது கொடுக்கலாம்.

இவரும் திருமண வயதை அடையும்போது திருமண தாக்கல்கள் இவர் வீடை தேடி நிறைய வந்தன. யாருக்குதான் இப்படிப்பட்ட மனைவி கிடைக்க நிறைய ஆண்மகன்கள் தவமிருந்தனர். ஆனால், அதிர்ஷ்டம் அடித்தது அரசாங்கத்தில் பெரிய பதவி வகிக்கும் ஒரு இளைஞனுக்கு. (எனக்கு அவர் பெயர் என்ன என்று தெரியவில்லை).

இவர்கள் திருமணம் மசூரியின் பெற்றோர்களின் சக்திக்கும் மீறி விமரிசையாக நடத்தினர். இருவரும் சந்தோஷமாத்தான் வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அவன் பெயர் வான் ஹக்கிம் (Wan Hakim). வருடங்கள் கடந்தாலும் மசூரியின் குணங்களில் ஒரு சின்ன வேறுபாடும் தெரியவில்லை. எப்போதும் போல எல்லாருகும் தன்னால் ஆன உதவிகளை செய்தே வந்தாள். அதனால் அந்த ஊரிலேயே அவருக்கு நல்ல பெயரும் புகழும் மேலும் மேலும் கூடியது.

அதே ஊரில் உள்ள, ராஜ பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு (Wan Manohara) மசூரியின் மேலும் அவருக்கு சேர்ரும் புகழும் மேலும் பெரும் பொறாமை கொண்டாள். அவளை எப்படியாவது பழி வாங்கியே தீரவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள். மசூரியின் கணவன் அடிக்கடி வேலை தொடர்பாக வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. மசூரியின் கணவன் வெளியூருக்கு சென்ற காலத்தில் மசூரியின் மேல் இவள் அபாண்டமான பழி ஒன்றை போட்டாள்..

கணவன் இல்லாத போது மசூரி மற்ற ஆண்களுடன் உறவு கொள்கிறாள் என்று அவதூறு கிளப்பினாள். காட்டுத் தீப்போல் பரவிய இந்த பொய் அரசர் காதுக்கும் எட்டியது. எல்லா விஷயத்திலும் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கும் மன்னர் இந்த விஷயத்தில் அவ்வளவு கவனம் செலுத்தாதற்கு என்ன காரணமோ தெர்ரியவில்லை..


தீர விசாரிக்காமல் மசூரிக்கு மரண தண்டனை விதித்தார். மரணத் தண்டனை என்பது தூக்கிலுவதில்லை. மக்களின் முன் ஒரு மரக்கம்பத்தில் கட்டி வைத்து அவர்கள் முன்னே ஆயுதத்தால் குத்தி/வெட்டி கொள்வது. மக்களில் ஒரு பகுதியினர் தங்களது தங்கங்களும் தானியங்களும் மன்னரிடம் ஒப்ப்படைத்து மசூரியை மீட்க முயற்சி செய்தனர். எதுவும் பலனழிக்கவில்லை.

தணடனை நாளும் வந்தது. ஆனால் என்ன ஆச்சர்யம்/ அதிசயம்!!!!

எந்த ஆயுதமும் அவள் உடம்பில் பதியவில்லை.. ரத்தங்களும் வெளியாகவில்லை. ஆனாலும், அந்த துன்புருத்தலில் மிகவும் வேதனைப்பட்டார் மசூரி. பலவாறு அரசாங்க வீரர்கள் முயற்சி செய்தும் அவரை கொல்லமுடியவில்லை. பிறகு மரக்கம்பத்தில் கட்டப்பட்ட மசூரியை அப்படியே விட்டுவிட்டு சென்று மறுநாள் தொடர்ந்தனர். எதுவும் பலனிக்கவில்லை..

ஒரு கட்டத்தில் மசூரியினால் அந்த வேதனையை தாங்க முடியாமல் அவரே தன்னை கொல்ல ஒரே ஒரு வழி இருக்கிறது என்றார். அவரின் தந்தையின் கெரிஸ் (Keris)-இல் அவரை குத்தினால் கண்டிப்பாக அவர் இறக்கும் சாத்தியம் இருக்கு என்பதை அவர் கூறியதும் வீரர்கள் மசூரியின் தந்தையிடம் அந்த கெரிஸை பெற்று மசூரியை குத்தினார்கள்.

உடம்பிலிருந்து செங்குருதி வெளியாகுவதற்கு பதிலாக ரத்தம் வெள்ளை வர்ணமாக வழிந்தது. அவரும் மாண்டார். அவர் உயிர் உடம்பை விட்டு பிரியும் முன்னே அவர் விட்ட பத்தினி சாபம்: உண்மையை அலசி ஆராயாமல் அபாண்டமான பழியை சுமத்திய மன்னரும் அவரது நாடும் ஏழு தலைமுறைக்கு முன்னேறவே முடியாமல், இருக்கிற பெயர், புகழ் எல்லாம் அழிந்து கஷ்டப்படட்டும். இதுவே இந்த மண்ணுக்கு கிடைக்கும் பாடமாக அமையட்டும்ன்னு சொல்லி இறந்துட்டாங்க. அந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாக மாறியது.

அந்த நாள் வரை செல்வாக்கு மிக்க நாடாக இருந்த லங்காவியில் பேரிடிகள் ஏற்ப்பட்டது. பக்கத்து நாடுகளின் படையெடுப்பு, நீர் பஞ்சம், உணவு பஞ்சம், உள்நாட்டு சலசலப்பு, ஆட்சி சண்டை என பல இன்னல்களால் லங்காவி இருண்டது. சரியாக ஏழு வருடம். அப்படி ஒரு நாடு இருப்பதையே மக்கள் மறக்கும் நிலைக்கு மாறியது

மசூரி இறந்து சில நாட்களில் நாடு திரும்பிய அவனது கணவனுக்கு கிடைத்தது தன் மனைவியின் இறப்பு செய்தி மட்டுமே. அவர் அந்த நாட்டின் மேல் வெறுப்பும் விரக்தியும் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி தன் மகனுடன் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்தார். மசூரியின் ஏழாவது தலைமுறை என நம்பப்படும் வான் ஆயிஷா (Wan Aishah) பிறந்த போதுதான் லங்காவி திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

அப்போது கெடா லங்காவியை ஆட்சி செய்ததால், லங்காவி ஒரு தனி நாடாக அல்லாமல் கெடா மாநிலத்தின் ஆட்சியின் கீழ் அடங்கியது. இப்போது லங்காவி ஒரு மாபெரும் சுற்றுலா தளமாக மாறியதுக்கும் முக்கிய காரணம் மசூரிதான். வெளிநாட்டவர்கள் லங்காவி வந்தால் அவர்கள் முதலில் பார்க்க வேண்டும் என நினைப்பது மசூரியின் சமாதிதான்.