Wednesday, December 17, 2008

கிழக்கில் மரகதம் - திரெங்கானு


திரெங்கானு மாநில கொடி

இதற்குப் முன்பு திரெங்கானு (Terengganu darul Iman)- (இறை)நம்பிக்கையின் உறைவிடம் மாநிலத்தைப் பற்றி விவரிக்கும் போது அதன் வரலாற்றைத் தொடாமலே நேரடியாக அம்மாநில சிறப்பைச் சொல்லியிருப்பேன். இனி அதன் வரலாற்று சுவடுகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமாக விளங்கும் திரெங்கானு மாநிலம் “terang ganu - வானவில் வெளிச்சம்” என்ற மலாய் சொல்லில் இருந்து உருவாகியிருப்பதாக அறியும் வேளையில் மேலும் பல வரலாற்றுப்பூர்வமான குறிப்புகள் இந்த திரெங்கானு சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. பண்டையக் கால தமிழர்கள் ‘திரங்கானி’ என்று அழைத்ததாகப் பல வரலாற்று ஆவணங்கள் கிடைக்கப் பெற்று திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளது.

‘திரங்கானி’ என்பது வடச்சொல் என்பது கடாரத் தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதியின் கூற்று. இம்மாநிலத் தோற்றம் குறித்த சரியானத் குறிப்புகள் இன்று வரையிலும் கிடைக்கப் பெறவில்லையென்றாலும் சீன நாட்டின் வணிகர் சாவ் சூ குவா (Chao Ju Kua) இம்மாநிலம் அப்போதைய பாலேம்பாங் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1225). அதே வேளையில் ‘நகரகர்த்தகாமா’ என்ற நூலில் அதன் ஆசிரியர் பிரபஞ்சா திரெங்கானு மாநிலத்தின் ‘டுங்குன்’ மற்றும் ‘பாக்கா’ மாஜாபாகித் அரசின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1365). இருப்பினும் திரெங்கானு மாநில அரசாட்சியை தொடக்கி வைத்தவர் சுல்தான் ஜைனால் அபிடீன் 1 என்று சரித்திரக் குறிப்புகள் பகர்கின்றன.

தற்போது இம்மாநிலம் 1998ஆம் ஆண்டு தொடங்கி சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் இப்னி அல்மஹ்ருன் சுல்தான் மஹ்மூட் அல்-முக்காஃபி பில்லா ஷா (ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே) அவர்களின் ஆட்சியின் கீழுள்ளது. மற்றொரு உபத்தகவல் மலேசியாவின் தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் (தற்போதைய மாமன்னர்)

தொல்பொருளியலாளர்கள் ‘பேவா’ மலையில் கற்களிலான கோடாரியையும் மண்பாண்டத்தையும் கண்டுப்பிடித்திருப்பதன் வழி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறியவும் முடிகிறது.

திரெங்கானு மாநிலத்தின் தலைவராக சுல்தான் விளங்குகிறார். அதே வேளையில் இம்மாநில மாவட்டங்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கீழுள்ளது. இம்மாநில அரசு இயந்திரத்தை மந்திரி புசார் இயக்குகிறார். இம்மாநிலம் மொத்தமாய் ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது. அவை ஒருங்கே கோலத்திரெங்கானு(மாநிலத்தலைநகர்), கெமாமான், டுங்குன், மாராங், உலுத்திரெங்கானு, செத்தியு மற்றும் பெசுட் ஆகும். 90 விழுக்காடு மலாய்க்காரர்களை மக்களாக கொண்டுள்ளது இம்மாநிலம். மீதி 10 விழுக்காட்டை சீனர்களும் இந்தியர்களும் நிறைவு செய்கின்றனர். ஆனாலும் அந்த பத்து விழுகாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது என் கணிப்பு.

இம்மாநிலம் மீன் பிடித்தொழிலை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும் பெட்ரோல் வழி கிடைக்கும் வருவாய் திரெங்கானு மாநில பொருளாதாரத்திற்கு மேலும் வலுக்கூட்டுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தென் சீனக் கடலாகும். தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட ஒரே மாநிலமும் திரெங்கானாகும்.


புலாவ் காப்பாஸ்
அத்தோடு அதிகமான குட்டி குட்டித் தீவுகளைக் கொண்ட மாநிலமும் இதுவேயாகும். அதனால் என்னவோ இம்மாநிலத்தை கிழக்கில் மரகதம் என்று வர்ணிக்கின்றனர். மொத்தமாய் ஏழு குட்டி தீவுகளை இம்மாநிலம் கொண்டுள்ளது. அதிலும் மிகவும் புகழ்ப்பெற்ற குறிப்பிடத்தக்கவை புலாவ் ரெடாங், புலாவ் காப்பாஸ், புலாவ் பெர்ஹெந்தியான் ரூ, புலாவ் ரூ ஹெந்தியான் மற்றும் புலாவ் தெங்கோல். இங்கு மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு என்று பொருள்படும். அதிக தீவுகளைக் கொண்டுள்ள திரெங்கானு மிக அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவிலேயே மிக நீளமான பதினேழு கடற்கரைகள் இம்மாநிலத்தின் காணக் கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.

தஞ்சோங் பிடாரா கடற்கரை

ரங்தாவ் அபாங் கடற்கரை
அதிலும் முக்கியமாக ரந்தாவ் அபாங் கடற்கரையைப் பற்றி இங்குச் சொல்லியே ஆக வேண்டும். கோலத்திரெங்கானுவிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடையே மிக பிரபலம் பெற்றச் சுற்றுலாத்தளமாகும். இதற்கு ஒரே முக்கியக் காரணம் இங்கு முட்டையிட வரும் கடலாமைகள். மிகப் பெரிய கடலாமைகள் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இங்கு முட்டையிட வருகின்றன. இதைக் காணவே அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் நேசிப்பவர்களுக்கு திரெங்கானு மிகச் சிறந்த இடமாகும்.
கடலாமை
நாட்டின் மிகத் தொன்மையான அருங்காட்சியகமான திரெங்கானு அருங்காட்சியகம் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது. புக்கிட் லோசோங்கில் 27 ஹெக்டர் நிலப்பரப்பில் இது பழைய அரண்மனையின் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலை கலாச்சாரம், கைவினைகள், பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் பல இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு இலவம்.

திரெங்கானு அருங்காட்சியகம்
மெராங் தீவு ரெடாங் தீவு