Tuesday, May 13, 2008

ஆசியாவின் இரகசியம்'ஆசியாவின் இரகசியம்' என்று கருதப்படும் சரவா அல்லது சரவாக் (Sarawak) மாநிலம் இன்று தன் இரகசிய விளிம்புகளிலிருந்து விடுப்பட்டு உலக பார்வையை தன் வசம் கவர்ந்து வருகின்றது. கலை, கலாச்சாரம், இசை, மர்மம், சரித்திரம் என்று இம்மாநிலத்தின் சிறப்பு நீண்டுக் கொண்டே போவது நமக்கொன்றும் ஆச்சரியமில்லைதான்.அதிலும் மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சரவா தீபகற்ப மலேசியாவைப் பிரிந்து போர்னியோ தீவில் அமைந்துள்ளது. கிட்டதட்ட 131, 587 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ள சரவா பரப்பளவில் தீபகற்ப மலேசியாவை ஒத்திருந்தாலும் அதன் நிலத்தின் பெரும்பான்மை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. சரவா மாநிலத்தின் தட்பவெப்ப நிலை வருட முழுவதும் 23 பாகை செல்சியஸிலிருந்து 32 பாகை செல்ஸியாகவே உள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு கடுமையான வெயிலாக இருந்தாலும் சுற்றிலும் அடர்ந்துள்ள காடுகள் கோடை வெப்பத்தின் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தியே வருகிறது. அத்தோடு 3300மி.மீட்டரில் இருந்து 4600 மி.மீட்டர் வரை இங்கு வருடம் முழுவதும் மழை பெய்வது விவசாயத்திற்கு மட்டுமல்லாது சூடான சீதோஷண நிலைக்கு பெரிதும் பங்காற்றுகிறது.
மனிதகுலத்தின் பொக்கிஷமான மழைக்காடுகளை(Rainforest) சூழ்நிலை மண்டலமாக கொண்டுள்ள இம்மாநில மக்களின் நீண்ட வீடுகள் உலகப் புகழ்பெற்றதாகும். மிகவும் தொன்மை வாய்ந்த இம்மழைக்காடுகள் கிட்டதட்ட 27 வகை பூர்வக்குடியனரின் வாழுமிடமாக உள்ளது அதன் மற்றுமொரு சிறப்பாகும். அவர்களில் ஈபான், காயான், மூருட், கெஞ்சா, கெனாவிட், கெடாயான், மெலானாவ், கெலாபிட், டாயாக், பெனான் மற்றும் பலர் அடங்குவர்.


வரலாறு
தொல்பொருளியலாளர்களின் ஆய்வின்படி புதிய கற்காலப் பண்பாடு இம்மாநிலத்தில் கி.மு 600க்கும் முன்பே தொடங்கி மனிதர்கள் நியாஹ் குகைகளில் (Niah Cave) வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற கோடாரி, கத்தி, சுத்தியல் போன்ற கற்கருவிகளைக் தொல்பொருளியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மேலும், சரவா மாநிலம் புருணை நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக வரலாறுகள் பகர்கின்றன. 1832 ம் ஆண்டுக்கு முன்பாகவே புருணை சுல்தான் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த ஷாரிப் சாஹாப் என்பவரை சரவா மாநிலத்திலுள்ள சுங்கை செக்ராங்கிற்கு மாவட்ட ஆட்சியாளராகவும் பின்பு சாடுங் மாவட்ட ஆட்சியாளராகவும் நியமித்தாக சான்றுகள் கூறுகின்றன. இதையடுத்து 1836-ல் பங்கேரான் மாகோத்தா என்பவரை புருணை சுல்தான் மாநில ஆட்சியாளராக அனுப்பி வைத்திருந்தார். அப்போது அம்மாநில மக்கள் டத்து பாத்திங்கி அலி என்பவரை தலைவராக கொண்டிருந்தனர். புதிதாக பதவியேற்ற பங்கேரான் மாகோத்தாவும் அவரது ஆட்களும் அம்மாநில மக்களிடம் புரிந்த அட்டூழியங்களை கண்டு சகிக்காத டத்து பாத்திங்கி அலி அம்மாநில மக்களின் ஒத்துழைப்போடு பங்கேரான் மாகோத்தாவை எதிர்த்துப் போரிட்டார். இந்நிலையை அறிந்த அப்போதைய புருணை சுல்தான் உமர் அலி சைபுடின் இப்பிரச்சினையை கையாள பங்கேரான் மூடா ஹாஷிம் என்பவரை அனுப்பி வைத்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த பங்கேரான் மூடா ஹாஷிம் ஆங்கிலேய பிரபுவான ஜேம்ஸ் புரூக்கின் (James Brooke) உதவியை நாடினார். அதற்கு ஈடாக சரவா மாநிலத்தின் தற்போதைய தலைநகராக திகழும் கூச்சிங்கையும், செர்னியாவானையும் தருவதாக ஒப்பந்தமானது.


டிசம்பர் மாதம் 1840-ல் டத்து பாத்திங்கி அலி புரூக்கிடம் சமாதானம் கோரி சரணடைந்ததை தொடர்ந்து 24 செப்டம்பர் 1841இல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் இராஜாவாக நியமிக்கப்பட்டார். 11 மார்ச் 1868இல் ஜேம்ஸ் புரூக் தம்முடைய 65ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமானார். அவரையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் புரூக் சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக பதவியேற்றார். இவருடைய ஆட்சியின்போதுதான் கூச்சிங் நகரம் ஆகஸ்டு மாதம் 1872இல் சரவாக்கின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று வரையிலும் இருந்து வருகிறது. சார்லஸ் புரூக்கை தொடர்ந்து அவருடைய மகன் சார்லஸ் வைனர் புரூக் 22 ஜூலை 1918இல் சரவாக்கின் மூன்றாவது இராஜாவாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 1941இல் புதிய அரசியலமைப்பு சட்டத்தை சரவா மாநில அரசு அங்கிக்கரித்தது.

முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, 105 வருட புரூக் குடும்ப ஆட்சிக்குப் பிறகு, 1 ஜூலை 1946இல் சரவா மாநிலம் அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது. அன்று முதல் சரவா மாநிலம் பிரிட்டிஷின் மகுடத்துவ காலணியாக 15 செப்டம்பர் 1963 வரை இருந்து வந்தது. 16 செப்டம்பர் 1963இல் சரவா, சபா, சிங்கப்பூர், மலாயா கூட்டமைப்புடன் இணைந்து மலேசியாவாக உருவெடுத்தது.

அரசியல்
சரவா ஆளுநரை மாநிலத் தலைமையாகவும் முதல்வரை மாநில அரசின் தலைமையாகவும் கொண்டுள்ளது. சரவாக்கின் முக்கிய பகுதிகளாக கூச்சிங், சிபு, ஸ்ரீ அமான், மீரி, லிம்பாங், சரிக்கி, சமரகான் மற்றும் பிந்துலு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 25 மாவட்டங்களும் 29 சிறுமாவட்டங்களும் அடங்கும். மாநில அரசாங்க ஆட்சி மையம் பெட்ரா ஜெயாவில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்
வெட்டுமரத் தொழில் இம்மாநிலத்தின் முதன்மை தொழிலாகும். விவசாயம் இம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இம்மாநில மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவை நெல்பயிர், பால்மரம், செம்பனை, கருப்பு மிளகு, தென்னை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசியாகும். அதிலும் குறிப்பாக சமராகான் மற்றும் கலாக்கா சரிபாஸ்ஸில் அமைந்துள்ள மாபெரும் விவசாய திட்டத்தின் கீழ் 86000 ஏக்கரிலிருந்து 161000 ஏக்கர் வரை செம்பனை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசி பயிரிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் கலாச்சாரம்
பல்வேறு இனங்களை சரவா கொண்டிருப்பதால் கலை கலாச்சாரமும் பலவகையில் அமைந்துள்ளது. ஙஜாட் அலு, ஙஜாட் அரோ மற்றும் டத்தூன் ஜூலுட் வகை நடனங்கள் இம்மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். விவசாயம் இம்மாநில மக்களின் முக்கியத் தொழில் என்பதால் சரவாக்கியர்கள் காவாய்(Gawai) பெருநாளை அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அன்று மாநில விடுமுறையாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பெரும்பான்மையான சரவாக்கினர் கைவினைத் தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இது இம்மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. ஒரு வகை களிமண்ணால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் சரவா ஜாடிகள்(Sarawak Vase) இங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.
புவா (Pua) கைத்தறித் துணிகள் சரவா மக்களின் மற்றுமொரு சிறப்பாகும். இந்த புவா வகைத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வகை வண்ணங்கள் வேர், இலைகள், மரத்தோல் போன்ற இயற்கை பொருட்களை மூலதனமாக கொண்டுள்ளது. இவ்வகை துணிகளை முக்கியமான திருவிழாக்கள் மற்றும் திருமணத்தின்போது மட்டும்தான் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுலாத்தலங்கள்
சரவா கலாச்சார கிராமம்(வாழும் அருங்காட்சியகம்)
17 ஏக்கர் நிலத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கிராமம் ஒட்டுமொத்த சரவா மாநிலத்தையும் கையகப்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. மெலனாவ் இனத்தினரின் உயரமான வீடுகள், ஈபான், ஓராங் உலு மற்றும் பிடாயு இனத்தினரின் நீண்ட வீடுகள், பெனான் இனத்தினரின் குடில்கள் மற்றும் பல்வகை வீடுகளை இங்கு காண முடிகிறது. அத்தோடு பல்வகை கலாச்சார நடனங்கள், திருமண வைபவங்கள், ஆடல்கள் பாடல்கள், சிற்பக் கலைகளையும் இங்கு கண்டு மகிழலாம். பல்லின இசை அரங்கேற்றம் இங்கு நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபெறுகின்றன. அதிலும் உள்ளூரின் சிறப்பு உணவுவகைகளை இங்குள்ள கடைகளில் அவசியம் வாங்கி சாப்பிட்டு மகிழ வேண்டும். பொதுவாகவே சரவா மாநிலத்திற்குச் சென்றவர்கள் இங்கு செல்லாமல் திரும்புவதில்லை.


தேசியப்பூங்காக்கள்
மழைக்காடுகளை சூழ்நிலைமண்டலமாக கொண்ட மலேசியாவில் அதிகமான தேசியப்பூங்காக்களைக் கொண்ட மாநிலமாக இந்த சரவா மாநிலம் திகழ்கின்றது. அதில் மூலு மலைத் தேசியப்பூங்கா, பாக்கோ தேசியப்பூங்கா, நியாஹ் தேசியப்பூங்கா, காடிங் மலைத் தேசியப்பூங்கா அதிக புகழ்பெற்றவையாகும். வருடந்தோறும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். இந்த பூங்காக்கள் 500க்கும் அதிகமான உயிரினங்களை வாழிடமாக கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதில் கிப்போன், ஓராங் ஊத்தான், மான் போன்ற விலங்குகளும் இம்மாநில சின்னமான ஹொர்ன்பில் பறவைகளை இங்கு அதிகம் காணலாம். ராஜா புரூக் வகை வண்ணத்துப்பூச்சிகளும் உலகிலேயே மிகப் பெரிய மலரான ரஃப்லேசியாவும்(Rafflesia)இங்குதான் உள்ளது.


சரவா அருங்காட்சியகங்கள்
சரவா மாநிலத்தில் மட்டுமே பதினொன்று அருங்காட்சியகங்கள் அமைந்திருப்பது இம்மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பாகும். அவை ஒருங்கே பழைய சரவா அருங்காட்சியகம், துங்கு அப்துல் ரகுமான் அருங்காட்சியகம், இஸ்லாமிய அருங்காட்சியகம், சீன அருங்காட்சியகம், நியாஹ் தொல்பொருள் அருங்காட்சியகம், லிம்பாங் அருங்காட்சியகம், பாராம் அருங்காட்சியகம், நெசவுத்துறை அருங்காட்சியகம், 'மியாவ்' பூனை அருங்காட்சியகம், வெட்டுமர அருங்காட்சியகம் மற்றும் பாறைநெய்(Petroleum)அருங்காட்சியகமாகும். பொது மக்களின் பார்வைக்காக வாரத்தின் ஏழு நாட்களும் இவை திறந்தே உள்ளன. அனைத்து அருங்காட்சியங்களுக்கும் நுழைவு இலவசமாகும்.

அஸ்தானா அரண்மனையும் மார்கரித்தா கோட்டையும்
சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக விளங்கிய சார்லஸ் புரூக்கால் 1879இல் இந்த மார்கரித்தா கோட்டை கட்டப்பட்டது. தன் மனைவி மார்கரித்தா இராணியாரின் பெயரையே இந்த கோட்டைக்கு சார்லஸ் சூட்டியிருந்தார். சரவா நதியையொட்டிள்ள இந்த கோட்டை பார்ப்பவர் மனதையும் கொள்ளைக் கொள்கிறது என்றால் மிகையில்லை. இந்தக் கோட்டைக்கு அருகே அஸ்தானா அரண்மனை அமைந்துள்ளது.
தற்போது மாநில ஆளுநரின்(யாங் டி பெர்துவான்) அதிகாரத்துவ இருப்பிடமாக விளங்கும் இந்த அஸ்தானா அரண்மனையும் சார்லஸ் புரூக்கால் கட்டப்பட்டதுதான். தங்களின் திருமண பரிசாக இந்த அரண்மனையை தன் மனைவிக்கு சார்லஸ் பரிசளித்திருந்தார். பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு மாநில ஆளுநரின் வசிப்பிடமாக இன்றுவரை இருந்து வருகிறது.
கோவில்கள்
துவா பெக் கோங் சீனக் கோவில்
துங்கு அப்துல் ரகுமான் சாலையில் அமைந்திருக்கும் இக்கோவில் கூச்சிங்கிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோவில் 1843இல் கட்டப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமான குறிப்பேடுகளில் 1876 இல்தான் இக்கோவில் உருவாகியிருப்பதற்கான குறிப்புகளைக் காண முடிகிறது. இறந்தவர்களின் ஆவிகளைக் நினைவுக்கூறும் வாங் காங் திருவிழா இங்கு வெகுவிமரிசையாகக் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இம்மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வாழவில்லையென்றாலும் கூச்சிங்கிலுள்ள பிள்ளையார் கோவிலும் மாரியம்மன் கோவிலும் இந்து சமய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்துக்களை அடுத்து சீனர்களும் இக்கோவில்களுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
உலக மழைக்காடு இன்னிசை விழா (Rainforest World Music Festival)


ஒவ்வொரு வருடமும் நடந்தேறி வரும் இந்த இன்னிசை விழா பதினொறாவது முறையாக இவ்வாண்டும் ஜூலை 11ஆம் நாள் தொடங்கி 13ஆம் நாள் வரை சரவா கலாச்சார கிராமத்தில் நடைப்பெறவுள்ளது. போர்த்துகல், கொங்கோ, இந்தியா, அங்கோலா, கொலும்பியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாலஸ்தீன், கிரிஸ், பிரேசில், போலந்து, அமெரிக்கா மற்றும் யு.கே என்று உலகின் பலதரப்பட்ட மூலையிலிருந்து வரும் இன்னிசைக் குழுக்கள் இந்த இன்னிசை விழாவில் பங்கேற்கின்றன. இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுகள் மலேசிய ரிங்கிட் 45இல் இருந்து 250 வரை விற்கப்பட்டும் வருகின்றது. ஆர்வமுள்ளவர்கள் இதற்காக இப்போதிலிருந்தே பதிந்தும் கொள்ளலாம்.
அவசியம் பார்க்க வேண்டிய வேறு சில இடங்கள்:
கூச்சிங்
சந்துபோங் மீன்பிடி கிராமம்
சாத்தோக் சந்தை
சிபு
சிபு சிவிக் செண்டர் அருங்காட்சியகம்
லெம்பாங்கான் சந்தை
ஏழு மாடி பகோடா
தங்க முக்கோணம்
ஈபான் நீண்ட வீடுகள்
பிந்துலு
பிந்துலு மசூதி
ஜேபாக் கிராமம்
குவான் யின் தோங் சீனக்கோவில்
சரவா விவசாய (அ) வேளாண்மை பூங்கா
தும்பினா பூங்கா
தஞ்சோங் பத்து கடற்கரை
கிடுரோங் கோபுரம்
மீரி
முதலை பண்ணை
பாறைநெய் அருங்காட்சியகம்
லுவாக் விரிகுடா
பெராயா கடற்கரை
ஹாவாய் கடற்கரை
மலர்தோட்டம்

1 மறுமொழிகள்:

')) said...

நல்ல தகவல் புனிதா.. இந்த சரவாக், சபா மாநிலங்களில் பல அற்புதமான விஷயங்கள் அடங்கியிருக்கு. நாமத்தான் அதையெல்லாம் எக்ஸ்ப்லோர் பண்ணாம இருக்கோம். :-)