Monday, January 26, 2009

சீனப்புத்தாண்டு - இது வசந்தக்கால விழா


புத்தாண்டு உலகமே ஆவலுடன் எதிர்ப்பாக்கும் ஒற்றுமைத் திருவிழாவாகும். உலக மக்களே ஒற்றுமையுடன் வரவேற்கும் இந்த புத்தாண்டு அவரவர் கலாச்சார நாட்காட்டிக்கொப்ப வெவ்வேறு தினங்களில் மலர்ந்தாலும் புதுமையும், புத்துணர்வும் எதிர்ப்பார்ப்பும் ஒன்றுதான். கடந்துச் சென்ற வருடங்கள் அனுபவ பாடங்களின் பெட்டகமாய் அவரவர் வாழ்க்கை கணக்கில் இணைந்துக் கொள்கின்றது. இன்பமும் துன்பமுமே மனிதர்தம் வாழ்வியல் பாடமாகும். இதுவும் கடந்துப் போகும் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரின் மனதிலும் துளிர்த்துச் செல்கிறது இந்த புத்தாண்டு.
2009ஆம் ஆண்டின் தொடக்கமாய் ஆங்கிலப் புத்தாண்டும், 29 டிசம்பர் 2008இல் மாஆல் ஹிஜ்ரா 1430H இஸ்லாமிய புத்தாண்டும், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டும் கொண்டாடப்பட்டது. இதே வரிசையில் இன்று சீனப்புத்தாண்டாகும். சீனர்களில் பெருநாளாக இந்தப் புத்தாண்டு வெகு விமரிசையாக உலக வாழ் சீனர்களால் கொண்டாடப்படுகிறது
சீன சந்திர நாள்காட்டியின்படி ஜனவரி 26ஆம் தேதி சீனர்களின் புது வருடம் பிறக்கிறது. வசந்தக்கால விழாவாகவும் சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுவது அதன் மற்றுமொரு சிறப்பாகும். பூமி பூப்பூக்கும் இனிய வசந்தத்தில் புத்தாண்டு மலர்வது உலகுக்கு மற்றுமின்றி உலக மாந்தர்க்கும் இனிய வரவேற்பாகும். இயற்கை அன்னையே மலர்களால் பூமியை ஆசிர்வதித்து புதிய ஆண்டை தொடக்கி வைக்கிறாள். சீனர்களின் சந்திர நாள்காட்டி பதினொன்று(லீப் வருடமாயிருப்பின்) அல்லது பன்னிரெண்டு மாதங்களை சுழற்சியாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீன வருடமும் ஒவ்வொரு விலங்கை (சீன சோதிடக்குறி) அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாண்டு மலரும் புத்தாண்டு எருது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.


சீன நாள்காட்டியின் பன்னிரெண்டு வருட சுழற்சியில் எருது வருடம் இரண்டாவது வருடமாக அமைகிறது. சீனர்கள் சோதிடத்தில் அதீத நம்பிக்கையுடைவர்கள் என்பதால் அவர்களின் நாள்காட்டியும் சீன சோதிட சாஸ்திரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த எருது வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பின் சின்னமாக விளங்குகின்றனர். சோம்பலென்பது இவர்களின் அகராதில் இல்லாதவொன்றாகும். பொறுப்புணர்ச்சி, அன்பு, நேர்மை, துணிவு, திறந்த மனப்பான்மை, தியாகம், பொறுமை, வலிமை, திறன், கண்டிப்பு மற்றும் தன்னம்பிக்கை இவ்வாண்டில் பிறந்தவர்களின் உறைவிடமாகும்.


மலேசியாவில் சீனர்கள் இரண்டாவது மிகப் பெரிய இனமாக விளங்குவதால் சீனப்பெருநாளுக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதோடு தேசிய விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேசிய விழாவென்ற அடிப்படையில் விருந்தோம்பல் முக்கிய அங்கமாகும். அவ்வகையில் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியர்களின் தேசிய அடையாளமாகும். உற்றவர் மற்றவர் அனைவரும் இன, மொழி, மத, அரசியல் பேதமன்றி இணையும் பாலமாய் இந்த திறந்த இல்ல உபசரிப்பு விளங்குகிறது. பல்லின மக்களின் உணவுவகை கலாச்சாரங்களை இதன் வழி அறிந்துக் கொள்ளவும் முடிகிறது. தேசிய அளவிலான திறந்த இல்ல உபசரிப்பை தேசிய ஒற்றுமை மற்றும் கலை பண்பாட்டு அமைச்சு ஏற்று நடத்தவுள்ளது. (இவ்வருட உபசரிப்பு எங்கு நடைபெறவுள்ளது என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.)


சீனப்பெருநாளின் முதன் நாளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் ஒன்றாக இணைந்து உணவருந்துவது சீனப்பெருநாளின் முக்கிய அங்கமாகும். இதுவரையில் தத்தம் சொந்த வேலையில் மூழ்கியிருந்தவர்களும், கருத்து வேறுப்பாட்டால் பிரிந்தவர்களும் இந்நாளில் ஒன்றுக்கூடி வேற்றுமையை மறந்து தங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றனர். இச்சமயத்தில் சிவப்பு உறையிலிட்ட பணத்தை (Ang Pow) திருமணமானவர்கள் திருமணமாக இளையோருக்கு வழங்கி மகிழ்கின்றனர். அவ்வாறு வழங்குவது அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது. அத்தோடு சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறமாகும். இந்த ‘அங் பவ்’ சீனர்களின் கலாச்சாரமாயினும் இன்று மலேசியர்களின் திருவிழா கலாச்சாரமாகிவிட்டது.


அனைத்து மலேசிய வங்கிகளும் இந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பண உறையை இலவசமாகவே வழங்குகிறது. அநேகமாய் நோன்பு பெருநாளுக்கு பச்சை நிறத்திலும்..தீபாவளிக்கு மஞ்சள், ஊதா நிறத்திலும் அழகிய பண உறைகளை காணப் பெறலாம். நான் கூட வங்கிகளின் அழகிய பண உறைகளை சேமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

சீனப்புத்தாண்டின் சிறப்பு உணவு வகைகளில் கோழி, வாத்து மற்றும் மீன் முக்கிய உணவாகும். அதிலும் சீனப்பெருநாளின் சமயத்தில் அனைத்து மலேசியர்களும் மாண்டரின் ஆரஞ்சு பழத்தை விரும்பி உண்கின்றனர். இதைத் தொடர்ந்து ‘லூவாஹான் ஜாய்’, வேர்க்கடலை, மற்றும் யீ சாங் (மீன்) உணவு வகைகள் இந்நாளின் சிறப்பு உணவாகும். ‘நியான்காவ்’ இனிப்பு பலகாரம் இத்திருநாளில் முக்கிய பலகாரமாகும். முறுக்கு இல்லாத தீபாவளியைப் போல் ‘நியான்காவ்’ இல்லா சீனப்பெருநாளுமில்லை.