Thursday, July 30, 2009

மலேசிய மினி ஒலிம்பிக் 2009


கடந்த ஜூலை 29 தொடங்கி ஆகஸ்டு 9 வரை மலேசிய விளையாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பில் ''மலேசிய மினி ஒலிம்பிக் 2009" புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது. இவ்வாண்டு இறுதியில் லாவோஸில் நடைப்பெறவிருக்கும் 25வது சீ விளையாட்டுப் போட்டிக்கு (25th Sea Games) நம் நாட்டு விளையாட்டளர்கள் தயாராகவும் அவர்களின் திறமையை பரிசோதிக்கும் களமாக இந்த மினி ஒலிம்பிக் 2009 ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

நீச்சல், சைக்கிளோட்டம், திடல் தடம், ஜிம்னாஸ்டிக், அம்பெறிதல், குறி சுடுதல், எடைத் தூக்குதல் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகள் இந்த மினி ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இப்போட்டிகள் தற்போது புக்கிட் ஜாலில் தேசிய அரங்கு, புக்கிட் கியாரா விளையாட்டரங்கம் மற்றும் சுபாங் குறிசுடும் மைதானத்திலும் நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டி குறித்து மேலும் தகவல் பெற :- மினி ஒலிம்பிக் 2009

Monday, January 26, 2009

சீனப்புத்தாண்டு - இது வசந்தக்கால விழா


புத்தாண்டு உலகமே ஆவலுடன் எதிர்ப்பாக்கும் ஒற்றுமைத் திருவிழாவாகும். உலக மக்களே ஒற்றுமையுடன் வரவேற்கும் இந்த புத்தாண்டு அவரவர் கலாச்சார நாட்காட்டிக்கொப்ப வெவ்வேறு தினங்களில் மலர்ந்தாலும் புதுமையும், புத்துணர்வும் எதிர்ப்பார்ப்பும் ஒன்றுதான். கடந்துச் சென்ற வருடங்கள் அனுபவ பாடங்களின் பெட்டகமாய் அவரவர் வாழ்க்கை கணக்கில் இணைந்துக் கொள்கின்றது. இன்பமும் துன்பமுமே மனிதர்தம் வாழ்வியல் பாடமாகும். இதுவும் கடந்துப் போகும் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரின் மனதிலும் துளிர்த்துச் செல்கிறது இந்த புத்தாண்டு.
2009ஆம் ஆண்டின் தொடக்கமாய் ஆங்கிலப் புத்தாண்டும், 29 டிசம்பர் 2008இல் மாஆல் ஹிஜ்ரா 1430H இஸ்லாமிய புத்தாண்டும், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டும் கொண்டாடப்பட்டது. இதே வரிசையில் இன்று சீனப்புத்தாண்டாகும். சீனர்களில் பெருநாளாக இந்தப் புத்தாண்டு வெகு விமரிசையாக உலக வாழ் சீனர்களால் கொண்டாடப்படுகிறது
சீன சந்திர நாள்காட்டியின்படி ஜனவரி 26ஆம் தேதி சீனர்களின் புது வருடம் பிறக்கிறது. வசந்தக்கால விழாவாகவும் சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுவது அதன் மற்றுமொரு சிறப்பாகும். பூமி பூப்பூக்கும் இனிய வசந்தத்தில் புத்தாண்டு மலர்வது உலகுக்கு மற்றுமின்றி உலக மாந்தர்க்கும் இனிய வரவேற்பாகும். இயற்கை அன்னையே மலர்களால் பூமியை ஆசிர்வதித்து புதிய ஆண்டை தொடக்கி வைக்கிறாள். சீனர்களின் சந்திர நாள்காட்டி பதினொன்று(லீப் வருடமாயிருப்பின்) அல்லது பன்னிரெண்டு மாதங்களை சுழற்சியாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீன வருடமும் ஒவ்வொரு விலங்கை (சீன சோதிடக்குறி) அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாண்டு மலரும் புத்தாண்டு எருது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.


சீன நாள்காட்டியின் பன்னிரெண்டு வருட சுழற்சியில் எருது வருடம் இரண்டாவது வருடமாக அமைகிறது. சீனர்கள் சோதிடத்தில் அதீத நம்பிக்கையுடைவர்கள் என்பதால் அவர்களின் நாள்காட்டியும் சீன சோதிட சாஸ்திரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த எருது வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பின் சின்னமாக விளங்குகின்றனர். சோம்பலென்பது இவர்களின் அகராதில் இல்லாதவொன்றாகும். பொறுப்புணர்ச்சி, அன்பு, நேர்மை, துணிவு, திறந்த மனப்பான்மை, தியாகம், பொறுமை, வலிமை, திறன், கண்டிப்பு மற்றும் தன்னம்பிக்கை இவ்வாண்டில் பிறந்தவர்களின் உறைவிடமாகும்.


மலேசியாவில் சீனர்கள் இரண்டாவது மிகப் பெரிய இனமாக விளங்குவதால் சீனப்பெருநாளுக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதோடு தேசிய விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேசிய விழாவென்ற அடிப்படையில் விருந்தோம்பல் முக்கிய அங்கமாகும். அவ்வகையில் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியர்களின் தேசிய அடையாளமாகும். உற்றவர் மற்றவர் அனைவரும் இன, மொழி, மத, அரசியல் பேதமன்றி இணையும் பாலமாய் இந்த திறந்த இல்ல உபசரிப்பு விளங்குகிறது. பல்லின மக்களின் உணவுவகை கலாச்சாரங்களை இதன் வழி அறிந்துக் கொள்ளவும் முடிகிறது. தேசிய அளவிலான திறந்த இல்ல உபசரிப்பை தேசிய ஒற்றுமை மற்றும் கலை பண்பாட்டு அமைச்சு ஏற்று நடத்தவுள்ளது. (இவ்வருட உபசரிப்பு எங்கு நடைபெறவுள்ளது என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.)


சீனப்பெருநாளின் முதன் நாளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் ஒன்றாக இணைந்து உணவருந்துவது சீனப்பெருநாளின் முக்கிய அங்கமாகும். இதுவரையில் தத்தம் சொந்த வேலையில் மூழ்கியிருந்தவர்களும், கருத்து வேறுப்பாட்டால் பிரிந்தவர்களும் இந்நாளில் ஒன்றுக்கூடி வேற்றுமையை மறந்து தங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றனர். இச்சமயத்தில் சிவப்பு உறையிலிட்ட பணத்தை (Ang Pow) திருமணமானவர்கள் திருமணமாக இளையோருக்கு வழங்கி மகிழ்கின்றனர். அவ்வாறு வழங்குவது அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது. அத்தோடு சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறமாகும். இந்த ‘அங் பவ்’ சீனர்களின் கலாச்சாரமாயினும் இன்று மலேசியர்களின் திருவிழா கலாச்சாரமாகிவிட்டது.


அனைத்து மலேசிய வங்கிகளும் இந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பண உறையை இலவசமாகவே வழங்குகிறது. அநேகமாய் நோன்பு பெருநாளுக்கு பச்சை நிறத்திலும்..தீபாவளிக்கு மஞ்சள், ஊதா நிறத்திலும் அழகிய பண உறைகளை காணப் பெறலாம். நான் கூட வங்கிகளின் அழகிய பண உறைகளை சேமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

சீனப்புத்தாண்டின் சிறப்பு உணவு வகைகளில் கோழி, வாத்து மற்றும் மீன் முக்கிய உணவாகும். அதிலும் சீனப்பெருநாளின் சமயத்தில் அனைத்து மலேசியர்களும் மாண்டரின் ஆரஞ்சு பழத்தை விரும்பி உண்கின்றனர். இதைத் தொடர்ந்து ‘லூவாஹான் ஜாய்’, வேர்க்கடலை, மற்றும் யீ சாங் (மீன்) உணவு வகைகள் இந்நாளின் சிறப்பு உணவாகும். ‘நியான்காவ்’ இனிப்பு பலகாரம் இத்திருநாளில் முக்கிய பலகாரமாகும். முறுக்கு இல்லாத தீபாவளியைப் போல் ‘நியான்காவ்’ இல்லா சீனப்பெருநாளுமில்லை.

Wednesday, December 17, 2008

கிழக்கில் மரகதம் - திரெங்கானு


திரெங்கானு மாநில கொடி

இதற்குப் முன்பு திரெங்கானு (Terengganu darul Iman)- (இறை)நம்பிக்கையின் உறைவிடம் மாநிலத்தைப் பற்றி விவரிக்கும் போது அதன் வரலாற்றைத் தொடாமலே நேரடியாக அம்மாநில சிறப்பைச் சொல்லியிருப்பேன். இனி அதன் வரலாற்று சுவடுகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமாக விளங்கும் திரெங்கானு மாநிலம் “terang ganu - வானவில் வெளிச்சம்” என்ற மலாய் சொல்லில் இருந்து உருவாகியிருப்பதாக அறியும் வேளையில் மேலும் பல வரலாற்றுப்பூர்வமான குறிப்புகள் இந்த திரெங்கானு சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. பண்டையக் கால தமிழர்கள் ‘திரங்கானி’ என்று அழைத்ததாகப் பல வரலாற்று ஆவணங்கள் கிடைக்கப் பெற்று திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளது.

‘திரங்கானி’ என்பது வடச்சொல் என்பது கடாரத் தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதியின் கூற்று. இம்மாநிலத் தோற்றம் குறித்த சரியானத் குறிப்புகள் இன்று வரையிலும் கிடைக்கப் பெறவில்லையென்றாலும் சீன நாட்டின் வணிகர் சாவ் சூ குவா (Chao Ju Kua) இம்மாநிலம் அப்போதைய பாலேம்பாங் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1225). அதே வேளையில் ‘நகரகர்த்தகாமா’ என்ற நூலில் அதன் ஆசிரியர் பிரபஞ்சா திரெங்கானு மாநிலத்தின் ‘டுங்குன்’ மற்றும் ‘பாக்கா’ மாஜாபாகித் அரசின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1365). இருப்பினும் திரெங்கானு மாநில அரசாட்சியை தொடக்கி வைத்தவர் சுல்தான் ஜைனால் அபிடீன் 1 என்று சரித்திரக் குறிப்புகள் பகர்கின்றன.

தற்போது இம்மாநிலம் 1998ஆம் ஆண்டு தொடங்கி சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் இப்னி அல்மஹ்ருன் சுல்தான் மஹ்மூட் அல்-முக்காஃபி பில்லா ஷா (ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே) அவர்களின் ஆட்சியின் கீழுள்ளது. மற்றொரு உபத்தகவல் மலேசியாவின் தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் (தற்போதைய மாமன்னர்)

தொல்பொருளியலாளர்கள் ‘பேவா’ மலையில் கற்களிலான கோடாரியையும் மண்பாண்டத்தையும் கண்டுப்பிடித்திருப்பதன் வழி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறியவும் முடிகிறது.

திரெங்கானு மாநிலத்தின் தலைவராக சுல்தான் விளங்குகிறார். அதே வேளையில் இம்மாநில மாவட்டங்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கீழுள்ளது. இம்மாநில அரசு இயந்திரத்தை மந்திரி புசார் இயக்குகிறார். இம்மாநிலம் மொத்தமாய் ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது. அவை ஒருங்கே கோலத்திரெங்கானு(மாநிலத்தலைநகர்), கெமாமான், டுங்குன், மாராங், உலுத்திரெங்கானு, செத்தியு மற்றும் பெசுட் ஆகும். 90 விழுக்காடு மலாய்க்காரர்களை மக்களாக கொண்டுள்ளது இம்மாநிலம். மீதி 10 விழுக்காட்டை சீனர்களும் இந்தியர்களும் நிறைவு செய்கின்றனர். ஆனாலும் அந்த பத்து விழுகாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது என் கணிப்பு.

இம்மாநிலம் மீன் பிடித்தொழிலை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும் பெட்ரோல் வழி கிடைக்கும் வருவாய் திரெங்கானு மாநில பொருளாதாரத்திற்கு மேலும் வலுக்கூட்டுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தென் சீனக் கடலாகும். தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட ஒரே மாநிலமும் திரெங்கானாகும்.


புலாவ் காப்பாஸ்
அத்தோடு அதிகமான குட்டி குட்டித் தீவுகளைக் கொண்ட மாநிலமும் இதுவேயாகும். அதனால் என்னவோ இம்மாநிலத்தை கிழக்கில் மரகதம் என்று வர்ணிக்கின்றனர். மொத்தமாய் ஏழு குட்டி தீவுகளை இம்மாநிலம் கொண்டுள்ளது. அதிலும் மிகவும் புகழ்ப்பெற்ற குறிப்பிடத்தக்கவை புலாவ் ரெடாங், புலாவ் காப்பாஸ், புலாவ் பெர்ஹெந்தியான் ரூ, புலாவ் ரூ ஹெந்தியான் மற்றும் புலாவ் தெங்கோல். இங்கு மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு என்று பொருள்படும். அதிக தீவுகளைக் கொண்டுள்ள திரெங்கானு மிக அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவிலேயே மிக நீளமான பதினேழு கடற்கரைகள் இம்மாநிலத்தின் காணக் கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.

தஞ்சோங் பிடாரா கடற்கரை

ரங்தாவ் அபாங் கடற்கரை
அதிலும் முக்கியமாக ரந்தாவ் அபாங் கடற்கரையைப் பற்றி இங்குச் சொல்லியே ஆக வேண்டும். கோலத்திரெங்கானுவிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடையே மிக பிரபலம் பெற்றச் சுற்றுலாத்தளமாகும். இதற்கு ஒரே முக்கியக் காரணம் இங்கு முட்டையிட வரும் கடலாமைகள். மிகப் பெரிய கடலாமைகள் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இங்கு முட்டையிட வருகின்றன. இதைக் காணவே அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் நேசிப்பவர்களுக்கு திரெங்கானு மிகச் சிறந்த இடமாகும்.
கடலாமை
நாட்டின் மிகத் தொன்மையான அருங்காட்சியகமான திரெங்கானு அருங்காட்சியகம் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது. புக்கிட் லோசோங்கில் 27 ஹெக்டர் நிலப்பரப்பில் இது பழைய அரண்மனையின் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலை கலாச்சாரம், கைவினைகள், பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் பல இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு இலவம்.

திரெங்கானு அருங்காட்சியகம்
மெராங் தீவு ரெடாங் தீவு

Friday, November 7, 2008

திரெங்கானு மாநிலமும் தமிழர்களும்

திரெங்கானு மாநில அரசின் தோற்றம் குறித்த ஆவணப்பட கலந்தாய்வில் ஈடுப்பட்டிருந்தப் பொழுது திரெங்கானு மாநிலத்தின் பெயர் 'திரங்கானி' என்ற இயற்பெயரில் இருந்தும் உருவாகியிருக்கலாமென்று சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர் ஒருவர் தம்முடைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.


மலைகளால் சூழப்பட்ட நிலமென்பதால் 'திரங்கானி' என்ற பெயர் அங்கு வாழ்ந்து வந்த பண்டைக்கால தமிழர்களால் வழங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இந்த கூற்றில் எத்துணை சதவிதம் உண்மையிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் அந்த ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் 'திரங்கானி' என்பது தமிழ்ச்சொல்தானா என்று கேள்வியெழுப்பியப் பொழுது, அந்தத் தகவல் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் ஆவணமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலை மலை சார்ந்த நிலத்தினை குறிஞ்சி நிலமென்று நம் இலக்கியங்கள் பகர்கின்ற வேளையில் இந்த 'திரங்கானி' சொல் தமிழ்ச்சொல்தானா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால், இதுப் பற்றி தகவலறிந்த மொழி அறிஞர்களும் சரித்திர ஆய்வாளர்களும் பின்னுட்டத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். இதன் வழி தவறான தகவல் நம் மாணவர்களை சென்றடைவதில் இருந்து தவிர்க்கலாம்.

Tuesday, September 30, 2008

லெமாங் - ஆஹா என்ன ருசி!


மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.

லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.

பண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான்.பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.

மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


வெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.


மேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??

ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.

“Selamat Hari Raya Aidilfitri"

Tuesday, August 26, 2008

திரெங்கானு பயணம் - 2

மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன.



அடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.

திரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

Monday, August 25, 2008

திரெங்கானு பயணம் - 1


இரவு முழுவதையும் மின்னலுக்கும் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் அமுத மொழிகளுக்கும் இரையாக்கிவிட்டமையால் காலை வரை தூங்காமலே கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் (KLIA) கிளம்பி விட்டேன். KLIA செல்லும் வரை என் மூளைக்கு உறைக்கவே இல்லை ஒரு விசயம். KLIA ஒன்றும் எனக்குப் புதிதல்லதான். நெருக்கமான சில நண்பர்களை வழியனுப்ப வந்த நினைவுகள் இன்னமும் ஈரமாய் நெஞ்சில் உள்ளது. கூடவே அவர்களின் பிரிவு ஏற்படுத்திய வலியும், இனி எப்போது சந்திப்போம் என்று தெரியாமலே விடைப்பெற்ற தருணங்களும் இன்றும் நீக்கமற நிலைத்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பகாங் மாநிலத்திலுள்ள Kuala Tahan சென்றிருந்தப் போது அங்குள்ள தேசியப் பூங்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு நண்பர்களுடன் Canopy Walk செல்ல முற்பட்ட போதுதான் ஒரு விசயம் உறைத்தது. உயரம்...ஆம் உயரம் 40 மீட்டர் உயரத்தில் 500 மீட்டர் தூரத்தைக் கொண்ட தொங்கும் பாலத்தில் அந்தப் பூங்காவையே சுற்றி வர வேண்டும். அட இது என்ன பெரிய கம்ப சூத்திரமா சின்ன வயதில் வீட்டு மாமரம் ஏறிய நினைவில் சரியென்று ஏறியும் ஆகிவிட்டது. அதற்குப் பின்புதான் தெரிந்தது திரும்பிப் போக முடியாத ஒரு வழி தடம் அது என்று. உயிர் பற்றிய பயம் அப்போதுதான் முதன் முதலாகத் தோன்றி மறைந்தது. கண்ணை மூடிக் கொண்டே எப்படியோ கடந்து வந்ததெல்லாம் இன்னமும் மறக்காத நிலையில் மறுபடியும் அந்தரத்தில் மிதக்க வேண்டுமா? ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று உள்ளம் ஆர்ப்பரித்தாலும் வேறு வழியில்லை. இதற்கு முன் விமான பயண அனுபவம் இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் அமைதி காக்க வேண்டியிருந்தது. காலையில் விமான நிலையத்திற்குக் கிளம்பும் சமயத்தில் வானொலியில் Spanair Flight JK5022 விபத்துக்குள்ளான செய்தி திகிலைப் பரப்பினாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை.


என்னத்தான் பயமென்றாலும் ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுக்க முடியவில்லை.? ஆனால் விமானம் கிளம்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் அட! உயரமாவது பயமாவது! கிட்டதட்ட 50 நிமிட பயணங்களுக்குப் பிறகு கோலாத்திரெங்கானு விமான நிலையத்தை அடைந்தப் பொழுது அதன் அழகு உண்மையிலேயே எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டது. மலாய் பாரம்பரிய அரண்மனை போன்ற தோற்றத்தில் அவ்விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அதன் அழகிய தோற்றத்திற்கு மேலும் மெறுகூட்டுகிறது என்றால் மிகையில்லை. திரெங்கானு மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பு அண்மையில் வடிவமைக்கப்பட்ட பளிங்கு(படிகம்) மசூதி. இரவு நேர சூழலில் அதன் அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆற்றோரமாய் அமையப் பெற்றிருக்கும் இந்த மசூதி தாஜ்மகாலை நினைவுப்படுத்திச் செல்கிறது. அடுத்து திரெங்கானு மாநிலத்தில் அவசியம் காண வேண்டிய இடம் இஸ்லாமிய நாகரிக பூங்கா. தற்பொழுது இங்கு நடைப்பெற்றும் வரும் உலக திருக்குரான் ஓதும் போட்டி இன்றோடு ஒரு நிறவை எய்துகிறது.

திரெங்கானு மாநிலத்தின் மிகப் பெரிய சிறப்பு "Batik" துணி வகையாகும். மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் கிடைக்கப் பெறும் இந்த வகைத் துணிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமை பாத்தேக் துணி அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.