Saturday, January 12, 2008

லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -1


புலாவ் லங்காவி என்றழைக்கப்படும் இது ஒரு தீவு. மலேசியாவிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடம் என்ன என்றூ கேட்டால் யோசிக்காமலேயே நான் சொல்லும் பதில் லங்காவி தீவுதான். எத்தனை இடம் சென்றாலும் லங்காவி என்னை கவர்ந்த அளவு வேறெந்த இடமும் கவரவில்லை என்றுதான் சொல்வேன். எனக்கு 4 நாள் கொடுத்தால் கூட எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து முடித்து வர முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு இடமும் மிகவும் பிரமாதமாக இருக்கும். விட்டு விட்டு வரவே மனமே வராது.

லங்காவி என்றதும் இது எந்த இடம்ன்னு உங்களுக்கு கேள்வி இருக்கும். 1999-இல் வெளியாகி சக்கை போடு போட்ட Anna and The King படம் ஞாபகம் இருக்கா? இது தாய்லந்து நாட்டின் ராஜ பரம்பரை கதை. இந்த படம் முழுதும் லங்கவியில்தான் எடுக்கப்பட்டது. பீட்டர் படம் பார்க்காதவங்களா நீங்க.. சரி, அப்போ பில்லா 2007 பார்த்தீங்களா? இந்த ப்டத்திலேயும் சில காட்சிகள் லங்காவியில் எடுக்கப்பட்டதுதான். மலேசியாவில் மிகவும் சுத்தமான, அழகான இடம் என்றால் அது லங்காவிதான்..

தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியதுதான் லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இடத்தில்தான் லங்காவி தீவு இருக்கிறது என்பது ஒரு ஸ்பெஷலிட்டி. இந்த தீவுகளிலேயே பெரிய தீவைத்தான் லங்காவி என்றைக்கிறோம். லங்காவி தீவு பினாங்கு தீவை விட மிகப் பெரியது.

லங்காவி அருகில் பல குட்டி குட்டி தீவுகள் இருக்கின்றன. லங்காவி வருபவர்கள் Island Hopping எனும் சுற்றூலா பேக்கேஜ் எடுத்து மற்ற சில தீவுகளுக்கும் போவது வழக்கம். (இதைப்பற்றி பிறகு விளக்குகிறேன்).

தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு 30 கிலேமீட்டர் கடலில் பயணம் செய்தால்தான் இந்த தீவுக்கு வந்து சேர முடியும். இந்த தீவு கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக கருதப்படுகிறது. ஆனாலும் இது தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. நீங்க இந்த தீவுக்கு வரும்போது உங்க செல்பேசியில் மலேசியா மற்றும் தாய்லாந்து தொலைதொடர்பு சிக்னல் மாறி மாறி காட்டும்.


வாங்க ஊர் சுத்தலாம்ன்னு கூப்பிட்டுட்டு கதை பேசிட்டு இருக்கேன்னு நீங்க நினைக்கலாம். ஆனாலும், இந்த மாதிரி தகவல் உங்களுக்கு பின்னால் இந்த இடத்தை சுற்றிப்பார்க்க வரும்போது உதவுமில்லையா? நீங்க சுற்றுலா சென்றாலும் ஒருத்தர் மைக்கை பிடிச்சுக்கிட்டு இதைத்தானே சொல்ல போறார்.. அதான் நான் முந்திக்கிட்டேன். சரி, வாங்க தொடரலாம். :-)

லங்காவி (Langkawi) என்பது மலாய் வார்த்தையிலிருந்து உருவாகப்பட்டது. லாங் (Lang) என்பது பருந்தை குறிக்கும். காவி (Kawi) என்பது காவி வண்ணத்தை குறிக்கும். ஒரு சிவப்பு கலந்த சாக்லேட் வர்ண (காவி வர்ண) பருந்து ஒன்று ஒரு கல்லை கொத்துவதை ஒரு மீனவன் பார்த்த கதை ஒன்று இருக்கிறது இங்கே. அதன் அடிப்படையாக கொண்டுதான் லங்காவி என்ற பெயர் வந்தது என்றும் சொல்கின்றனர்.


இதே தீவில் பல மர்ம கதைகளும், லெஜெண்ட் கதைகளும் உள்ளன. அதனால், இந்த தீவு லெஜண்ட் தீவு (Legendary Island) என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான புராண கதை (Legendary story) என்று சொன்னால் மசூரி என்ற பெண்ணை பற்றிய கதை. அது என்ன கதைன்னு பின்னால் பார்க்கலாம்.

ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேனே! லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone) என்றும் அழைக்கப்படுகிறது. பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். அதனால், சுற்றுப்பயணிகள் பலர் இதை சொர்க்க பூமி என்றும் அழக்கிறார்கள். நீங்கள் மினிமம் 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அழிக்கப்படும்.

லங்காவியில் என்ன ஸ்பெஷல்ன்னு பார்க்கிறதுக்கு முன்னே எப்படி லங்காவிக்கு போகலாம்ன்னு பார்ப்போமா? என்னுடன் பயணத்தில் இணைய நீங்க தயாரா?

லங்காவி அனைத்துலக விமான நிலையம் பாடாங் மத்சீராத் (Padang Matsirat)-ல இருக்கிறது. நீங்கள் குவாலா லும்புர் அனைத்துல விமான நிலயத்திலிருந்து (KLIA) MAS அல்லது Air Asia விமானம் மூலமாக சென்றால் 55 நிமிடத்தில் நீங்கள் லங்காவி வந்தடைவீர்கள். சிங்கப்பூரிலிருந்து Silk Air விமானமும், சீனாவிலிருந்து China Airlines விமானமும், தாய்வானிலிருந்து Eva Air விமானமும் நேராக லங்காவி போகிற வசதியும் உண்டு. லண்டன் மற்றும் நியூ யோர்க்கிலிருந்தும் லங்காவி செல்கிற விமானங்கள் இருக்கின்றன.

ஆனால், எனக்கு பிடித்தது ஃபெர்ரி (Ferry) சவாரிதான். குவாலா லும்புரிலிருந்து நீங்கள் லங்காவி போவதென்றால் பேருந்து மூலமாக குவாலா கெடா (Kuala Kedah) அல்லது குவால பெர்லிஸ் (Kuala Perlis)-கு செல்ல வேண்டும். கெடா அல்லது பெர்லிஸ்க்கு நீங்க் ரயில் மூலமாக கூட போகலாம்.

பேருந்து மூலமாக பயண தூரம்:
குவாலா லும்புர் - குவாலா கெடா - 6 மணி நேரம்
குவாலா லும்புர் - குவாலா பெர்லிஸ் - 7 மணி நேரம்

என்ன விலை என்று கேட்குறீர்களா? மலிவுதாங்க.

பெரியவர்: RM 15
குட்டீஸ்: RM 10

குவாலா கெடாவிலிருந்து நீங்க ஃபெர்ரி ஏறினால் 1 மணி 30 நிமிடத்தில் குவா ஜெத்தியில் (Jeti Kuah) வந்து சேருவீர்கள்.


ஓக்கே.. இப்போ நாம் லங்காவி தீவு வந்தடைந்தாச்சு.. டீ, காப்பி சாப்பிடவங்கல்லாம் கொஞ்சம் பிரேக் எடுத்து சாப்பிட்டு வாங்க.. நம் பயணத்தை தொடரலாம்.

அடுத்து நாம் லங்காவியில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா தளங்களுக்கும் போகலாம். நீங்கள் தயாரா?

8 மறுமொழிகள்:

')) said...

லங்காவிக்கு ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன், உலகில் நான் சென்ற இடங்களில் மறக்க முடியாத இடம்.ஆள் அரவமற்ற காட்டின் நடுவில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் நானும் நண்பரும் மட்டும் குளித்த அனுபவம் இன்றும் மறக்காமல் இருக்கிறது.உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

')) said...

ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.
நன்றி.

')) said...

எனும் ஆங்கில படம் முக்கால்பகுதி படப்பிடிப்பு பேராக் மாநிலத்தில், அதுவும் குறிப்பாக பத்து காஜாவில் நடைப்பெற்றது. தாய்லாந்து மன்னரின் அரண்மனை போன்ற வடிவில் பத்து காஜா எனும் கோல்ப் தளத்தில் செட் அமைத்தார்கள். அப்படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான யானைகள் லாரியில் கொண்டுவரப்பட்டன. அதோடு ஒரு மிகப் பெரிய சிலை ஒன்று பகுதி பகுதியாக லாரியில் கொண்டுவரப்பட்டு அங்கு இணைக்கப்பட்டன. இன்று பத்து காஜா சென்றாலும் அந்த அரண்மனை செட்டை நாம் காணலாம். மீதமுள்ள படப்பிடிப்பு ஈப்போ, பினாங்கு, லங்காவி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டன. இதில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் மலேசியாவின் முதல் அரண்மனைக் கோட்டையான Kellies Castle அங்குதான் உள்ளது. இவ்வரண்மனையை கெல்லிஸ் அவர்கள் தன் மனைவிக்காக கட்டியதாகும். இதை மலேசியாவின் தாஜ் மகால் எனலாம்.இந்த அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் இருந்தவர்கள் இன்னும் அங்கு வாழ்கிறார்கள். அந்தக் கோட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்களைக் கொண்டே அங்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் இந்து ஆலயமும் கட்டப்பட்டது. அதோடு Kellies Castle-லுக்கும் இந்து ஆலயத்திற்கும் ஒரு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. அதை இன்றளவிலும் நாம் காணலாம், இருப்பினும் அந்தச் சுரங்கப் பாதை கற்களையும் சிமெண்டுகளையும் வைத்து அடைத்து விட்டனர். அதற்கானக் காரணம் இன்றளவிலும் மர்மமாக உள்ளது..

')) said...

மிகவும் அருமையான தொடர் இது. தன்னுடைய நாட்டைப் பற்றி எடுத்துச் சொல்லும் தொடர் என்பதாலும் பாராட்டப்பட வேண்டியதே.

லங்காவி மிக அழகு. ஐயமேயில்லை. 2007ஐ மலேசியாவில்தான் தொடங்கினேன். அப்பொழுது லங்காவியும் சென்று வந்தேன். பினாங்கிலிருந்து ஃபெர்ரியில் லங்காவி சென்றோம். மிக அருமையான பயணம். மிகவும் ரசித்தேன்.

')) said...

2008 ஜ நான் மலேசியாவில் தான் கொண்டாடினேன். லங்காவி போகலாம் என்று இருந்தோம் ஆனால் நேரமின்மை காரணமாக போக முடியவில்லை :((.. மிஸ் பண்ணிட்டமோன்னு தோணுது... நல்ல தொடர் கலக்குங்க.

')) said...

நியாபகம் வச்சிக்கறேன்.. மலேசியா வரும் போது கண்டிப்பாக பார்க்கிறேன்.. படம் அருமையா இருக்கு...

')) said...

சமீபத்தில் தான் மலேசியாவந்து சென்றேன்,அப்போது சில என் உறவினர்கள் வற்புறுத்திய போதும் விடுமுறையின் அளவு கருதிதவிர்த்து விட்டேன், ஆனால் உங்கள் பதிவை முன்பே படித்திருந்தால் கண்டிப்பாக லங்காவிசென்றிருப்பேன்,இருந்தாலும் பரவாயில்லை,அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக அங்கு செல்வேன்...உங்கள் வழிகாட்டியுடன்...தொடருங்கள்

')) said...

ஜில்லென்று ஒரு மலேசியா

its a great work.. Keep it up..