Friday, August 24, 2007

மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்

"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது? ஏன் இடது பக்கம் நீல வர்ணம்? ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன? நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும்? ஆனால், ஏன் இந்த நட்சத்திரத்துக்கு மட்டும் 10க்கு மேற்ப்பட்ட கால்கள்?"

-இது ஒரு நண்பர் ஜி-டால்க்கில் என்னிடம் கேட்ட கேள்வி.


மலேசிய கொடியில் இருக்கும் வர்ணங்களைப் பற்றியும் அதில் இருக்கும் அந்த நிலா, நட்சத்திரம், கோடுகள் பற்றியும் வினவினார். அவர் கேள்விகளுக்கு முழு விளக்கம் கொடுக்க வேண்டியது ஒரு மலேசியனான என் கடமை.

1949-இல் முதன் முறையாக தேசிய கொடி வடிவமைக்கும் போட்டி நடைப்பெற்றது. அதில் மூன்று மட்டுமே கடைசி சுற்றுக்கு தேர்வாகின. முதல் கொடியில் இரண்டு கெரிஸ்கல் (keris) [இது மலாய்காரர்களின் பாரம்பரிய ஆயுதம்] கொடியின் நடுவில் வைக்கப்பட்டு அதை சுற்றி 5 கால் கொண்ட நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தது. இரண்டாவது கொடி ஏறக்குறைய முதல் கொடியை போலவே இருந்தது. ஆனால், அதில் இரண்டு வட்டங்கள் கொண்ட 11 கால் நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கொடியில் 11 நீலம் மற்றும் வெள்ளை சமமான கோடுகள் வரையப்படிருந்தன. நடுவில் தேய்பிறை நிலா ஒன்று பெரிதாக வரையப்படிருந்தது.

நவம்பர் 29 1949-இல் மூன்றாவது வடிவமைப்பு கொடி நாட்டின் தேசிய கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் அந்த வடிவமைப்பு மேலும் சில மாறுதல்களை கண்டது.

நீலம்-வெள்ளை கோடுகள் சிவப்பு-வெள்ளை கோடுகளாக வர்ண மாற்றம் கண்டன. கொடியின் இடது புறம், நீல வர்ணத்தால் நிறைக்கப்பட்டது. அந்த நீல பெட்டகத்தில் மஞ்சள் நிறத்தில் தேய்பிறை நிலாவும் 11 கால் கொண்ட நட்சத்திரமும் வரையப்பட்டது. 11 கால் நட்சத்திரம் 11 மலாய் அரசபையை குறிக்கின்றது.

புதிய மேம்படுத்தப்பட்ட தேசிய கொடி முதன் முறையாக 1950, மே 26-இல் பிரிட்டீஷ் ஹை கமிஷனில் கொடி ஏற்றும் திருவிழாவில் ஏற்றப்பட்டது. ஆனாலும், அது இப்பொழுது இருக்கும் ஜாலூர் கெமிலாங் இல்லை.

1963-இல் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயுவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் மலாயா மலேசியா என்று பெயர் மாற்றம் கண்டது. அதே நேரத்தில் தேசிய கொடியில் சில மாறுதல்கள் அவசியமாக பட்டது.

11 கால் கொண்ட நட்சத்திரம் 14 கால்களாக மாறியது. 11 சிவப்பு-வெள்ளை கோடும் 14 ஆக உருமாறியது. 11 மலாய் அரசபை மற்றும் மூன்று புதிய அரசபையின் எண்ணிக்கையை குறிக்கின்றது.

இந்த புதிய தேசிய கொடி 1963-ஆம் வருடம் செப்டம்பர் 16-இல் முதன் முறையாக ஏற்றப்பட்டது. சிங்கப்பூர் 1965-ஆம் வருடம் மலேசியாவை விட்டு வெளியேறி தனி நாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14, 13-ஆக மாற வில்லை. பிற்காலத்தில் அந்த எக்ஸ்ட்ரா ஒன்று மத்திய அரசாங்கமய் குறிப்பிட பட்டது.

இன்று எங்கள் தேசிய கொடியில் 14 கால் கொண்ட நட்சத்திரம் இருக்கின்றது. இடப்புறத்தில் உள்ள கருநீல வர்ண பெட்டகம் முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது. இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதை குறிக்கின்றது. வெள்ளை வர்ணம் மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும் மனங்களையும் குறீக்கின்றது. சவால்களை சந்திக்கும் தைரியத்தை குறிப்பது சிவப்பு வர்ணம். மஞ்சள் வர்ணம் அரசர்களையும், அவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் குறிக்கின்றது. மலேசியாவின் ஆட்சி இஸ்லாமிய முறைபடி நடக்கின்றதெனும், இள்லாமியம் மலேசியாவின் official religion என்றும் குறிக்கின்றது தேய்பிறை.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2001-ஆம் ஆண்டில் தேசிய கொடியை ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) என்று பெயர் சூட்டினார். ஜாலூர் கெமிலாங் என்றால் Stripes of Glory என்று பொருள்.

ஜாலூர் கெமிலாங் மலேசிய திருநாட்டின் வெள்ளியையும் மேன்மையையும் குறீக்கும் ஒரு அடையாளம். ஆகவே, மலேசியர்களே! நமது வீட்டிலும் ஜாலூர் கெமிலாங்கை பறக்க விடுவோம், வாருங்கள்....

2 மறுமொழிகள்:

')) said...

\"மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்" \\

நல்ல பதிவு தோழி :)

')) said...

ஒ! ஓ!! மிக அருமையான படைப்பு. மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. மிக விரைவில் (எனக்கு நேரம் கிட்டும் போது) இந்திய கொடியில் வரலாற்றைக் கூறுகிறேன் !!