சத்யா டீச்சர் மேஜைக்கு வருகிறார்.
"செக்கு, இன்றைக்கு வார நாட்கள் எப்படி மலாயில் உச்சரிப்பது என்று சொல்லி தருகிறீர்களா?"
"கண்டிப்பாக சத்யா. மாணவர்களே, இன்று எப்படி வார நாட்களை மலாயில் உச்சரிப்பது என்று பார்ப்போமா?"
"'இன்று என்ன கிழமை?' என்பதை எப்படி மலாயில் உச்சரிப்பது என்று யாருக்காவது தெரியுமா?"
வகுப்பிலுள்ள அனைவரும் மௌனம் காக்கின்றனர்.
"சரி, நானே சொல்கிறேன்."
இன்று - என்ன - கிழமை
Hari ini - apa - hari
"Hari ini hari apa? [ ஹாரி இனி ஹாரி ஆப்பா?]"
"ஒவ்வொரு நாளையும் மலாயில் எப்படி சொல்வது என்று பார்ப்போம் வாங்க"
ஞாயிறு - Ahad - ஆஹாட்
திங்கள் - Isnin - இஸ்னின்
செவ்வாய் - Selasa - செலாசா
புதன் - Rabu - ராபு
வியாழன் - Khamis - காமிஸ்
வெள்ளி - Jumaat - ஜுமா-ஆட்
சனி - Sabtu - சப்து
"இன்று வெள்ளிக்கிழமை என்பது மலாயில் எப்படி சொல்வது? இளா, நீ சொல்லு பார்ப்போம்?"
"ம்ம்ம்.. Hari ini hari jumaat [ஹாரி இனி ஹாரி ஜுமா-ஆட்]"
"சரியான பதில் இளா. வெல்டன்."
"ஞாயிற்று கிழமையை hari minggu [ஹாரி மிங்கு] என்றும் அழைக்கலாம்."
"ஏன் ஞாயிறுக்கு மட்டும் இந்த ஸ்பெஷலான பெயர் செக்கு?"
"ஞாயிறு வாரத்தின் முதன் நாள். அது மட்டுமில்லாமல் ஞாயிறு என்பது விடுமுறைநாள். அதற்க்குதான் இந்த ஸ்பெஷல் பெயர்."
"பிறந்த நாள் என்பதை hari jadi [ஹாரி ஜாடி] என்றைக்கப்படும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று நீங்கள் யாருக்காவது சொல்ல வேண்டும் என்றால் Selamat Hari Jadi [செலாமாட் ஹாரி ஜாடி] என்று சொல்லலாம்"
"சுதந்திர தினம் என்பதை எப்படி சொல்வது செக்கு?"
"சுதந்திரம் என்பது மலாயில் மெர்டேக்கா என்று சொல்வார்கள். சுதந்திர தினம் என்றால் Hari Kemerdekaan [ஹாரி கெமெர்டேக்கா-ஆன்] என்று சொல்வோம். Hari Kebangsaan [ஹாரி கெபாங்சா-ஆன்] என்றும் சொல்லலாம்."
"வேறு எதாவது கேள்வி இருக்கிறதா மாணவர்களே?"
"செக்கு, பள்ளி விடுமுறை நாள் என்பதை எப்படி சொல்வது"
"ம்ம்.. நல்ல கேள்விதான் விடுமுறை என்பது cuti [ச்சூத்தி]. விடுமுறை நாள் என்றால் hari cuti [ஹாரி ச்சூத்தி]. பள்ளி விடுமுறை நாள் என்றால் hari cuti sekolah [ஹாரி ச்சூத்தி செக்கோலா]. செக்கோலா என்றால் பள்ளிகூடம் என்று பொருள்."
"செக்கு, எப்போ எங்களுக்கு ச்சூத்தி செக்கோலா?" சிவா கைத்தூக்கி கேட்கிறார்.
"க்ளாஸ் ஆரம்பிச்சு இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதுக்குள்ள உனக்கு பள்ளி விடுமுறை வேணுமா? பேசாமல் உட்கார்ந்து பாடத்தை கவனி சிவா"
"தினமும் என்பதை tiap-tiap hari (தியாப்-தியாப் ஹாரி) என்று சொல்ல வேண்டும். நாளை என்பது Esok (ஏசோக்). நேற்று என்பது semalam (செமாலாம்) என்றும் சொல்ல வேண்டும்"
"சரி, இன்று நிறைய படிச்சாச்சு.இன்று என்ன புதிதாக கற்றுக்கொண்டோம் என்று பார்ப்போமா?"
ஞாயிறு - Ahad - ஆஹாட்
திங்கள் - Isnin - இஸ்னின்
செவ்வாய் - Selasa - செலாசா
புதன் - Rabu - ராபு
வியாழன் - Khamis - காமிஸ்
வெள்ளி - Jumaat - ஜுமா-ஆட்
சனி - Sabtu - சப்து
இன்று என்ன நாள்? - Hari ini hari apa? - ஹாரி இனி ஹாரி ஆப்பா?
இன்று வெள்ளிகிழமை - Hari ini hari jumaat - ஹாரி இனி ஹாரி ஜுமா-ஆட்
பிறந்த நாள் - hari jadi - ஹாரி ஜாடி
சுதந்திர தினம் - Hari Kemerdekaan - ஹாரி கெமெர்டேக்கா-ஆன்
பள்ளி விடுமுறை நாள் - hari cuti sekolah - ஹாரி ச்சூத்தி செக்கோலா
தினமும் - tiap-tiap hari - தியாப்-தியாப் ஹாரி
நாளை - Esok - ஏசோக்
நேற்று - semalam - செமாலாம்
"செக்கு, நாங்கள் கிளம்பலாமா?"
"என்கே கிளம்புறீங்க? இன்னைக்கு உங்களுக்கு நான் வீட்டுப்பாடம் தர போகிறேன். உங்கள் விடையை பின்னூட்டமாக போடுங்கள். கேள்விகள் இதுதான்:"
இந்த வாக்கியங்களை மலாய் மொழிக்கு மாற்றுக:
1- உன் பிறந்த நாள் எப்பொழுது?
2- நேற்று நான் கடைக்கு சென்றேன்
3- போன சனிக்கிழமையன்று நான் மூன்று பழங்கள் சாப்பிட்டேன்.
"நீங்கள் மலாய் மொழி எந்த அளவுக்கு கற்று இருக்கீர்கள் என்று இந்த பதில்களை வைத்துதான் என்னால் உங்களை மதிப்பிட முடியும். அதனால், மறவாமல் உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் அனுப்பவும். அது மட்டுமில்லை. அடுத்த வகுப்பில் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதையும் பின்னூட்டம் வழியாக தெரிவித்தால், அடுத்த பகுதியில் அதையும் கற்றுக் கொடுப்பேன். ஜும்ப்பா லாகி மாணவர்களே."
'தெரிமா காசே செக்கு."
Friday, September 7, 2007
மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 5
Monday, September 3, 2007
மலேசியா 50
மலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று சோதிக்கலாமா? உங்களுக்கு இதில் எத்தனை வகை தெரியும்? பார்த்திருக்கிறீர்கள்? ருசித்திருக்கிறீர்கள்?
நீங்கள் மலேசியா வந்தால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து, ருசித்து, அனுபவிக்க தவறாதீர்கள்!
உணவு
1- நாசி லெமாக் (Nasi Lemak) 
2- நாசி கண்டார் (Nasi Kandar)
3- ரொட்டி சானாய் - (Roti Canai) 
4- தே தாரேக் (Teh Tarik) 
5- காஜாங் சாத்தே (Kajang Satay) 
6- ரம்லி பர்கர் (Ramly Burger)
7- சார் கொய் தியாவ் (Char Koay Teow) 
8- ஏ.பி.சி - (ABC - Air Batu Campur) 
9- ரோஜாக் - (Rojak) 
10- யீ சாங் (Yee Sang)
உச்சரிப்பு (தினமும் அதிகம் பயன்படுத்துவது)
11- லா (Lah)
12- மச்சான் (Machan)
13- அலாமாக் (Alamak)
14- தா பாவ் (Ta Pau)
15- சின் சாய் (Cin Cai)
16- அய்யோ (Aiyo)
17- மலேசியா போல்லே (Malaysia Boleh)
18- யாம் சேங் (Yam Seng)
பிரமுகர்கள்
19- துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman) 
20- துன் டாக்டர் மகாதீர் முகமது (Tun Dr Mahathir Muhamad) 
21- தான் ஸ்ரீ பி.ரம்லீ (Tan Sri P.Ramlee)
22- சூடீர்மான் (Sudirman)
23- மாட் ரெம்பிட் (Mat Rempit)
24- ஆ லோங் (Ah Long)
25- லாட் (Lat)
கட்டிடங்கள் & இடங்கள்
26- கெந்திங் ஹைக்லண்ட்ஸ் (Genting Highlands) 
27- 24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ் (24 Hour Mamak Stalls) 
28- பத்துமலை (Batu Caves) 
29- பெத்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Petronas Twin Tower) 
30- பினாங்கு பாலம் (Penang Bridge) 
31- புத்ராஜயா (Putrajaya) 
32- கினாபாலு மலை (Mount Kinabalu)
33- சவ் கிட் ரோடு (Chow Kit Road)
34- குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் ( KL International Airport)
35- மலாக்கா (Malacca) 
36- டத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka) 
37- இரவு சந்தை (Pasar Malam) 
கலாச்சாரம் & மற்றவை
38- ப்ரோட்டோன் (Proton)
39- பாலீக் கம்போங் (Balik Kampung)
40- திறந்த வீடு உபசரிப்பு (Open House)
41- பாஜூ கூரூங் (Baju Kurung) 
42- நீண்ட வீடு (Long House) 
43- பாபா & ஞோஞ்ஞா (Baba & Nyonya)
44- மலேசியரின் விருந்தோம்பல் (Malaysian Hospitality)
45- "மலேசியன் நேரம்" - "Malaysian Time"
46- மை காட் - MyKad 
47- 2020 தொலைநோக்கு திட்டம் (Vision 2020)
48- பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports) 
49- வாயாங் கூலிட் (Wayang Kulit)
50- பல வர்ணங்களில் அங் பாவ் ( Ang Pow in many colours) - சீனர்கள் (சிவப்பு), மலாய்க்காரர்கள் (பச்சை), இந்தியர்கள் (மஞ்சள்)
Thursday, August 30, 2007
சுதந்திர தின கொண்டாட்டங்கள்
ாளை நடைபெறவிருக்கும் மலேசியாவின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்க்க விரும்பும் பொது மக்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச பேருந்துகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சி நடக்கும் இடமும்,இலவச பேருந்து சேவை கிடைக்கும் நேரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி:சுதந்திர தினத்தின் முதல் நாள்(Merdeka eve celebration)
இடம்:டாத்தாரான் மெர்டேக்கா(dataran Merdeka)
நேரம்:6.30PM- 2Am
தேதி:30 ஆகஸ்ட்-31ஆகஸ்ட்
------------------------------
சுதந்திர தின அணிவகுப்பு
டாத்தாரான் மெர்டேக்கா(dataran Merdeka)
6.30AM-2PM
தேதி:31 ஆகஸ்ட்
------------------------------
சுதந்திர தின கொண்டாட்டம்(Merdeka Mammoth Celebration)
மேர்டேக்கா அரங்கம்(stadium merdeka)
நேரம்:6.30PM-2AM
தேதி:31ஆகஸ்ட்-1செப்டம்பர்
------------------------------
இந்த இலவச பேருந்து சேவைகள் 5 இடங்களிலிருந்து் கிடைக்கும்.இந்த இடங்களில் மொத்தம் 3500 வாகனம் நிறுத்தும் இட வசதியும் உண்டு.வாகன ஒட்டுனர்கள் இங்கே வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு,இலவச பேருந்து வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
இலவசப் பேருந்து வசதி கிடைக்கும் இடங்கள்:
Zone A covers National Museum & KL Sentral
Zone B - Inland Revenue Board Building, Federal Territory Mosque Complex, National Archieves
Zone C - Taman Tasik Perdana, national Mosque, Kompleks Pusat Islam, National Planetarium, Tun Abdul Razak Memorial
Zone D - National Arts Heritage Avademy, Bukit Perdana Government Complex, Public Works Ministry Complex
Zone E - Dewan Bahasa & Pustaka building, Institute of Diplomacy and Foreign Relations
பொதுமக்கள் வானவேடிக்கைகளைக் கண்டுகளிக்க நாளை கோலாலம்பூர் கோபுரத்தின்(KL tower) பார்வையார்கள் மேடை(viewing platform) மற்றும் அங்குள்ள உணவகங்களும் இரவு 1 மணி வரையிலும் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
Rapid KL-யின் பேருந்து மற்றும் இரயில் சேவை நேரங்களையும் சுதந்திர தின கொண்டாட்டத்ததை முன்னிட்டு நீட்டித்துள்ளனர்.நீட்டிக்கப்பட சேவைகளின் விபரங்கள் பின்வருமாறு:
இரயில் சேவைகள் :
5 Kelana Jaya வழியில் உள்ள நிலையங்கள் - Kelana Jaya, KL Sentral, Pasar Seni, Masjid Jamek மற்றும் KLCCயின் காலை மணி 2.30 வரையில் அவர்களின் சேவையை நீட்டித்துள்ளனர்.
Bangsar, Dang Wangi, Kampung Baru மற்றும் Ampang ஆகிய நிலையங்கள் இரவு 2 மணி வரை இயங்கும்.
Ampang நிலைய வழியில் உள்ள Hang Tuah, Masjid Jamek மற்றும் Bandaraya நிலையங்களும் மணி 2.30 வரை இயங்கும்.
Ampang மற்றும் kelana jaya வழியில் உள்ள மற்ற இரயில் நிலையங்கள் காலை 12.45க்கு மூடப்ப்படும்.
பேருந்து சேவைகள்:
நகர மையத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் காலை மணி 3 வரையில் தங்கள் சேவைகளை நீடித்து உள்ளன.இந்த பேருந்துகள் நேராக நகரத்திற்கும்(Bukit Bintang, Titiwangsa Hub மற்றும் Pasaramakota) அல்லது இரயில் நிலையங்களுக்கும்(KLCC, Taman Melati, Wangsa Maju, Setiawangsa, Kelana jaya மற்றும் KL Sentral செல்லும்.நகர மையங்களுக்குச் செல்லும் சாலைகள் மாலை 6 மணிக்கு பிறகு அடைக்கப்படுவதால் இந்த இடங்களுக்கு மட்டுமே பேருந்து செல்ல முடியும்.
மேல் விபரங்களுக்கு
www.rapidkl.com.my
சுதந்திர தின வாழ்த்துக்கள்!
எழுதியவர்
Anonymous
1 மறுமொழிகள்
நேரம்: 11:25 PM
குறிச்சொற்கள் அறிவிப்பு, சுதந்திர தினம், சூடான செய்தி, நிகழ்வுகள்
Friday, August 24, 2007
மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்
"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது? ஏன் இடது பக்கம் நீல வர்ணம்? ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன? நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும்? ஆனால், ஏன் இந்த நட்சத்திரத்துக்கு மட்டும் 10க்கு மேற்ப்பட்ட கால்கள்?"
-இது ஒரு நண்பர் ஜி-டால்க்கில் என்னிடம் கேட்ட கேள்வி.
மலேசிய கொடியில் இருக்கும் வர்ணங்களைப் பற்றியும் அதில் இருக்கும் அந்த நிலா, நட்சத்திரம், கோடுகள் பற்றியும் வினவினார். அவர் கேள்விகளுக்கு முழு விளக்கம் கொடுக்க வேண்டியது ஒரு மலேசியனான என் கடமை.
1949-இல் முதன் முறையாக தேசிய கொடி வடிவமைக்கும் போட்டி நடைப்பெற்றது. அதில் மூன்று மட்டுமே கடைசி சுற்றுக்கு தேர்வாகின. முதல் கொடியில் இரண்டு கெரிஸ்கல் (keris) [இது மலாய்காரர்களின் பாரம்பரிய ஆயுதம்] கொடியின் நடுவில் வைக்கப்பட்டு அதை சுற்றி 5 கால் கொண்ட நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தது. இரண்டாவது கொடி ஏறக்குறைய முதல் கொடியை போலவே இருந்தது. ஆனால், அதில் இரண்டு வட்டங்கள் கொண்ட 11 கால் நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கொடியில் 11 நீலம் மற்றும் வெள்ளை சமமான கோடுகள் வரையப்படிருந்தன. நடுவில் தேய்பிறை நிலா ஒன்று பெரிதாக வரையப்படிருந்தது.
நவம்பர் 29 1949-இல் மூன்றாவது வடிவமைப்பு கொடி நாட்டின் தேசிய கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் அந்த வடிவமைப்பு மேலும் சில மாறுதல்களை கண்டது.
நீலம்-வெள்ளை கோடுகள் சிவப்பு-வெள்ளை கோடுகளாக வர்ண மாற்றம் கண்டன. கொடியின் இடது புறம், நீல வர்ணத்தால் நிறைக்கப்பட்டது. அந்த நீல பெட்டகத்தில் மஞ்சள் நிறத்தில் தேய்பிறை நிலாவும் 11 கால் கொண்ட நட்சத்திரமும் வரையப்பட்டது. 11 கால் நட்சத்திரம் 11 மலாய் அரசபையை குறிக்கின்றது.
புதிய மேம்படுத்தப்பட்ட தேசிய கொடி முதன் முறையாக 1950, மே 26-இல் பிரிட்டீஷ் ஹை கமிஷனில் கொடி ஏற்றும் திருவிழாவில் ஏற்றப்பட்டது. ஆனாலும், அது இப்பொழுது இருக்கும் ஜாலூர் கெமிலாங் இல்லை.
1963-இல் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயுவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் மலாயா மலேசியா என்று பெயர் மாற்றம் கண்டது. அதே நேரத்தில் தேசிய கொடியில் சில மாறுதல்கள் அவசியமாக பட்டது.
11 கால் கொண்ட நட்சத்திரம் 14 கால்களாக மாறியது. 11 சிவப்பு-வெள்ளை கோடும் 14 ஆக உருமாறியது. 11 மலாய் அரசபை மற்றும் மூன்று புதிய அரசபையின் எண்ணிக்கையை குறிக்கின்றது.
இந்த புதிய தேசிய கொடி 1963-ஆம் வருடம் செப்டம்பர் 16-இல் முதன் முறையாக ஏற்றப்பட்டது. சிங்கப்பூர் 1965-ஆம் வருடம் மலேசியாவை விட்டு வெளியேறி தனி நாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14, 13-ஆக மாற வில்லை. பிற்காலத்தில் அந்த எக்ஸ்ட்ரா ஒன்று மத்திய அரசாங்கமய் குறிப்பிட பட்டது.
இன்று எங்கள் தேசிய கொடியில் 14 கால் கொண்ட நட்சத்திரம் இருக்கின்றது. இடப்புறத்தில் உள்ள கருநீல வர்ண பெட்டகம் முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது. இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதை குறிக்கின்றது. வெள்ளை வர்ணம் மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும் மனங்களையும் குறீக்கின்றது. சவால்களை சந்திக்கும் தைரியத்தை குறிப்பது சிவப்பு வர்ணம். மஞ்சள் வர்ணம் அரசர்களையும், அவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் குறிக்கின்றது. மலேசியாவின் ஆட்சி இஸ்லாமிய முறைபடி நடக்கின்றதெனும், இள்லாமியம் மலேசியாவின் official religion என்றும் குறிக்கின்றது தேய்பிறை.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2001-ஆம் ஆண்டில் தேசிய கொடியை ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) என்று பெயர் சூட்டினார். ஜாலூர் கெமிலாங் என்றால் Stripes of Glory என்று பொருள்.
ஜாலூர் கெமிலாங் மலேசிய திருநாட்டின் வெள்ளியையும் மேன்மையையும் குறீக்கும் ஒரு அடையாளம். ஆகவே, மலேசியர்களே! நமது வீட்டிலும் ஜாலூர் கெமிலாங்கை பறக்க விடுவோம், வாருங்கள்....
Tuesday, August 21, 2007
மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4
'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லை
பள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்க!
அதான் திரும்ப வந்துட்டேன்ல. க்லாஸ் மஜாவா ஆரம்பிச்சிடலாம். :-)
"செலாமாட் பாகி மூரிட்-மூரிட்"
"ஹய்யா.. டீச்சர் வந்துட்டாங்க.."
"என்ன க்ளாஸ்ல மொத்தமே அஞ்சு பேர்தான் இருக்கீங்க போல??"
"செக்கு, நல்லா பாருங்க.. நாங்க மொத்தம் செப்புலோ பேர் இருக்கோம்", கார்த்திக் எழுந்திரிச்சு சொல்கிறார்.
"ஆஹா.. பல நாள் வகுப்புக்கு நான் வரலைன்னாலும், நீங்க சரியா பாடத்தை படிச்சிட்டு இருக்கீங்க போல? கூட் கூட்"
"மாணவர்களே, இன்றைய பாடத்துக்கு போகலாமா?"
சிவா மேஜையில் சாய்ந்துக்கொண்டே, "வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க! நடத்துங்க நடத்துங்க.."
"இன்றைக்கு நாம் வர்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்"
வெள்ளை - Putih - பூதே
மஞ்சள் - Kuning - கூனிங்
சிவப்பு - Merah - மேரா
ஊதா - Ungu - உங்கு
நீலம் - Biru - பீரு
பச்சை - Hijau - ஹீஜாவ்
மயிலை (Grey) - Kelabu - கெலாபு
கருப்பு - Hitam - ஹீத்தாம்
கதிர் எழுந்து, "செக்கு, 'அந்த பூனையின் நிறம் கருப்பு' என்பதை எப்படி சொல்றது?
அந்த - பூனையின் - நிறம் - கருப்பு
Itu - kucing - warna - hitam
"Kucing itu berwarna hitam [கூச்சிங் இத்து பெர்வர்ண ஹீத்தாம்]. மலாயில் மொழி மாற்றம் செய்யும்பொழுது வார்த்தைகளின் இடம் மாறுப்படும். சில இடங்களில் imbuhan [இம்பூஹான்] என்றழைக்கப்ப்டும் இலக்கியத்தை சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வாக்கியத்தில் 'ber' [பெர்] என்ற இம்பூஹான் சேர்க்கப்பட்டிருக்கிறது."
"செக்கு, பழுப்பு வர்ணத்தை எப்படி மலாய் மொழியில் சொல்வது?"
"பழுப்பு என்பது சாக்லேட்டின் வர்ணம் அல்லவா? அதனால் அந்த் சாக்லேட்டின் பெயரையே உபயோகிக்கப்படுகிறது. பழுப்பை மலாயில் Coklet [சொக்லேட்] என்று அழைப்பார்கள். ஆரஞ்சு என்ற வர்ணமும் ஆரஞ்சு பழத்தின் பெயரையே கொண்டழைக்கப்படுகிறது. ஆரஞ்சை மலாயில் Oren [ஓரேன்] என்று அழைப்பார்கள்"
"செக்கு, கருநீலம், கருஞ்சிவப்பு, கரும்பச்சைன்னு தமிழில் இருக்கே! மலாயிலும் அப்படி இருக்கிறதா?" சுமதி கேட்டார்.
"கண்டிப்பாக இருக்கு. இந்த கரும் வர்ணங்களுக்கு Tua [துவா] என்று வர்ணத்தின் பின்னால் சேர்க்க வேண்டும். துவா என்றால் முதியது என்று பொருள். நீங்க கருநீலம் என்று சொல்ல வேண்டும் என்றால் merah tua [மேரா துவா] என்று சொல்ல வேண்டும்"
"கரும்பச்சை என்றால் hijau tua [ஹீஜாவ் துவா], கருமஞ்சள் என்றால் kuning tua [ கூனிங் துவா] என்பது சரிதானே செக்கு?" என்று பொன்ஸ் கைத்தூக்கி சொல்கிறார்.
"பொன்ஸ், சரியாக சொன்னாய். கூட்."
"செக்கு, பிங்க் என்பது மலாயில் பிங்க் என்றுதான் சொல்வார்களா?" கேள்விக்குறியுடன் கேட்கிறார் காயத்ரி.
"இல்லை காயத்ரி. பிங்க் என்பதை merah muda [மேரா மூடா] அல்லது merah jambu [மேரா ஜம்பு] என்று சொல்லலாம். மூடா என்றால் இளமை என்று பொருள். மேரா ஜம்பு என்பதே அதிகம் உபஓகிக்கும் வார்த்தை. ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். அதனின் வெளித்தோற்றம் பிங்க் வர்ணத்தில்தான் இருக்கும். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு என்றழைக்கப்படுகிறது."
"பிங்க் வர்ணத்துக்கு இப்படி ஒரு சரித்திரமா? ஹீஹீஹீ" G3 சிரிக்கிறார்.
"சொல்ல மறந்துவிட்டேனே மாணவர்களே. பழுப்பு வர்ணத்துக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. Perang [பேராங்] என்றும் சொல்லலாம். ஆனால், இந்த வர்த்தையை நீங்கள் சொல்லும்பொழுது உங்கள் உச்சரிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெராங் என்றால் போர் என்று பொருள். பேராங் என்றால்தான் பழுப்பு வர்ணம் என்று பொருள். உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டுமென்றால் சொக்லேட் என்றே சொல்லுங்கள். சரியா?"
"சரி செக்கு"
"சரி, இன்றைய பாடம் இத்தோடு முடிவடைகிறது. இன்றைய வகுப்பு வர்ணமயமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்"
"தெரிமா காசே செக்கு. ஜும்ப்பா லாகி"
-----------------------------------------
இன்றைய பாடம்:
வெள்ளை - Putih - பூதே
மஞ்சள் - Kuning - கூனிங்
சிவப்பு - Merah - மேரா
ஊதா - Ungu - உங்கு
நீலம் - Biru - பீரு
பச்சை - Hijau - ஹீஜாவ்
மயிலை (Grey) - Kelabu - கெலாபு
கருப்பு - Hitam - ஹீத்தாம்
பழுப்பு - Coklet / Perang - சொக்லேட் / பேராங்
ஆரஞ்சு - Oren -ஓரேன்
பிங்க் - Merah Jambu - மேரா ஜம்பு
Sunday, August 19, 2007
மலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்

ஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு சுதந்திரப் பொன்விழாவையொட்டி 73.3 மீட்டர் நீளமும் 41.4 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி வடிவமைப்புக் கோலத்தை அமைத்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இந்த தேசிய தினக் கோலத்தை வடிவமைப்பதில் 2000க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கோலம் மலேசியாவின் மிகப்பெரிய கோலமாகக் கருதப்படுகிறது. ஏ.சி.எஸ் பள்ளி மைதானத்தில் நேற்று காலை 9.00 மணி அளவில் பொது மக்கள் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. பேரா மந்திரி புசாரின் பிரதிநிதியாக உயர்கல்வி இலாகாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் அத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். பள்ளி மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் அவர்களின் திறனையும் வெளிக்கொணரும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்படும் இதுப்போன்ற சாதனைகள் மூலம் நாட்டின் மீது மாணவர்களிடையே சிறந்த சிந்தனையை விதைக்கலாம்.

Friday, August 17, 2007
50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை
மலேசிய நாட்டின் 50-ஆவது பொன்விழா சுதந்திர தினத்தையொட்டி இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமது படாவி, முன்னாள் பிரதமர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது, துன் ஹூசேன் ஓன், துன் அப்துல் ரசாக், சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் நாட்டிற்கு அர்ப்பண உணர்வுடன் வழங்கிய வழங்கிக் கொண்டிருக்கும் அர்ப்பணமிக்க பங்கேற்பிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 10 மணி நேரம் என 50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை நடத்த மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார் குளுவாங் கல்வி மைய முதல்வர் டாக்டர் அ.இளந்தேவன்.
இந்த துணிகர முயற்சி வெள்ளிக்கிழமை 17-8-2007 மாலை 3.00 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 19-8-2007 மாலை 5.00 மணிக்கு நிறைவேறும். எண் 32, ஜாலான் இள்மாயில், விஸ்மா சோமசன்மா, குளுவாங் எனும் முகவரியில் உள்ள அவரின் குளுவாங் கல்வி மையத்தில் தொடங்கும். இந்நிகழ்ச்சியை ம.இ.கா ஜொகூர் மாநில தொடர்புக்குழுச் செயலாளர் செனட்டர் எம்.எம்.சாமி தொடக்கி வைப்பார். இச்சாதனையில் 1,300 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.
ஏற்கனவே 2005-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்தாற்போல் 24 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி மலேசிய சாதனை புத்தக வரலாற்றில் தமது பெயரை பதிவு செய்த அவர் 2005 டிசம்பரில் இடைவிடாது 88 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி கின்னஸ் உலக சாதனை முத்திரையையும் பதித்த டாக்டர் அ.இளந்தேவன் தாம் பிறந்தமண்ணின் சுதந்திர தின விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.